தீக்கிரையான வீடுகளிலிருந்து உடைமைகளை எடுக்க அனுமதி: ஹாங்காங்

தீக்கிரையான வீடுகளிலிருந்து உடைமைகளை எடுக்க அனுமதி: ஹாங்காங்

2 mins read
a87c69a0-7183-4fb0-976f-47ff8bebd5f9
வாங் ஃபுக் பகுதியில் உள்ள ஏழு குடியிருப்பு வீடுகள் தீயில் கருகியதில் 168 பேர் மாண்டனர். - படம்: ராய்ட்டர்ஸ்

ஹாங்காங்: ஹாங்காங்கின் டை போ வட்டாரத்தில் தீக்கிரையான வாங் ஃபுக் கார்ட் குடியிருப்புப் பகுதியின் குடியிருப்புக் கட்டடங்களிலிருந்து உடைமைகளை எடுக்கக் குடியிருப்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 20ஆம் தேதியிலிருந்து மே 4ஆம் தேதிவரை வீடுகளை இழந்த 1,700க்கும் அதிகமான குடும்பங்கள் கட்டங்கட்டமாகக் குடியிருப்புக் கட்டடதிற்குச் சென்று உடைமைகளை எடுக்கலாம்.

அவ்வாறு செல்லும் குடியிருப்பாளர்களுக்கு உதவ ஒவ்வொரு நாளும் 1,000 அதிகாரிகள் பணியமர்த்தப்படுவர்.

காலை 9 மணியிலிருந்து பிற்பகல் 1 மணிவரை, பிற்பகல் 2.30 மணியிலிருந்து மாலை 6.30 மணிவரை எனக் குறிப்பிட்ட நேரத்துக்குள் குடியிருப்பாளர்கள் வீடுகளுக்குள் செல்லலாம்.

ஒரே நேரத்தில் அதிகபட்சம் நால்வர் மட்டும் தங்கள் வீடுகளுக்குள்செல்ல அனுமதிக்கபடுவர். அவர்கள் அதிகபட்சம் மூன்று மணிநேரம்வரை வீடுகளில் இருக்கலாம்.

கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி எட்டுக் குடியிருப்புக் கட்டடங்களைக் கொண்டிருந்த வாங் ஃபுக் பகுதியில் தீ மூண்டது. அதில் வாங் சி இல்லம் என்ற கட்டடம் தவிர ஏழு குடியிருப்புக் கட்டடங்கள் தீயில் கருகின.

அந்த விபத்தில் 168 பேர் மாண்டனர்.

அரசாங்கத்தின் சமூக ஊழியர்களுடன் கலந்துரையாடிய பிறகு வீட்டிற்குள் செல்ல விரும்புவோர் தங்கள் பெயர்களைப் பதிவுசெய்துகொள்ளலாம்.

தீ மூண்ட கட்டடங்களில் மின்தூக்கிகள் செயல்படாததால் குடியிருப்பாளர்கள் படிகளைப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

20, 30 மாடிகளில் உள்ள வீடுகளுக்கு மூத்தோர், உடற்குறையுள்ளோர், பிள்ளைகள் ஏறிச் செல்லவேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

15 நாள்களில் 1,700 குடும்பங்களைச் சேர்ந்த 7,000க்கும் அதிகமான உறுப்பினர்கள் உடைமைகளை எடுக்க வீடுகளுக்குத் திரும்புவர் என்று மதிப்பிடப்படுகிறது.

அவசரப் பராமரிப்பு, மருத்துவ ஆதரவு வழங்க காவல்துறை அதிகாரிகள், தீயணைப்பு அதிகாரிகள், மருத்துவ உதவியாளர்கள் ஆகியோர் சம்பவ இடத்தில் பணியமர்த்தப்படுவர்.

பாதிக்கப்பட்ட கட்டடங்களைப் பழுதுபார்க்கக் குறைந்தது ஒன்பது மாதங்களாகும் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்