சான் ஃபிரான்சிஸ்கோ: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் ஒருவருக்கு மிகக் கடுமையான எம்பாக்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை நவம்பர் 16ஆம் தேதியன்று தெரிவித்தது.
அமெரிக்காவில் ஒருவருக்கு இத்தகைய கடுமையான எம்பாக்ஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை அதிகாரிகள் வெளியிடவில்லை.
அவர் அண்மையில் கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்கா திரும்பியதாக அவர்கள் கூறினர்.
அவருக்கு மிகக் கடுமையான எம்பாக்ஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது சான் ஃபிரான்சிஸ்கோ நகருக்குத் தென்பகுதியில் உள்ள சான் மேட்டியோ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோரை அடையாளம் கண்டு தேடும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கிளேட் ஐபி (Clade Ib) என்று அழைக்கப்படும் இவ்வகை எம்பாக்ஸ் கிருமி, அமெரிக்காவில் பரவி வருவதற்கான ஆதாரம் இல்லை என்று கலிஃபோர்னியாவின் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் கட்டுப்பாடு, தடுப்பு மையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
ஆப்பிரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டு ஜெர்மனி, சுவீடன், தாய்லாந்து, பிரிட்டன் உட்பட சில நாடுகளுக்குத் திரும்பிய சிலருக்கு இந்தக் கடுமையான எம்பாக்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ஐக்கிய அரபு சிற்றரசுகளிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பிய ஒருவருக்கு இந்நோய் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
பிரிட்டனில், பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து எம்பாக்ஸ் கிருமி அவரது குடும்ப உறுப்பினர்கள் மூவருக்குப் பரவியது.