லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் கோல்ஃப் மைதானத்தில் தோட்டாக்கள் இருந்த துப்பாக்கியை வைத்திருந்த ஆடவர் ஆகஸ்ட் 2ஆம் தேதி கைது செய்யப்பட்டிருந்தார்.
குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு அவரின் மனநிலையை நீதிமன்றம் ஆராயவேண்டும் என்று நீதிபதி ஒருவர் புதன்கிழமை (ஆகஸ்ட் 26) தீர்ப்பளித்தார்.
கலிஃபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த 38 வயது ஜீனின் ஜான் டெயில் எனும் ஆடவர், சம்பந்தப்பட்ட இடத்தில் நன்கொடை திரட்டு நிகழ்ச்சி ஒன்றில் திரு டிரம்ப் பேசவிருந்ததற்கு சில நாள்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். ஆயுதம் தொடர்பான விதிமுறைகளை மீறியதாக அவர்மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
டெயிலால் குற்றிவியல் நடவடிக்கைகளை எதிர்நோக்க முடியாது என்று லாஸ் ஏஞ்சலிஸ் கவுன்டி உயரிய நீதிமன்ற (Superior Court) நீதிபதி ஜான் ஜே. லொனகர்ன் தீர்ப்பளித்தார். உயிரை மாய்த்துக்கொள்வதைத் தடுக்கும் ஆடையை அணிந்தபடி நீதிமன்றத்தில் முன்னிலையான டெயிலுக்குப் பிணை மறுக்கப்பட்டது.
டெயில் தரப்பு வாதம்
தனது கட்சிக்காரரால் தனக்கான வாதத்தைப் புரிந்துகொள்ளவோ அதில் பங்கேற்கவோ இயலாது என்று அவரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார்.
டெயில், அமெரிக்காவின் முன்னாள் மரீன் படை வீரர் என்றும் உரிமம் உள்ள பாதுகாவல் அதிகாரி என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். அவர் முதன்முதலில் கடந்த ஜூலை 31ஆம் தேதி ராஞ்சோ பேலோஸ் வெர்டேயில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் காணப்பட்டதாக அவர்கள் கூறினர்.
அப்போது அவர் செவிப்பொறிகளை அணிந்திருந்ததாகவும் மத்திய அரசாங்க அதிகாரிகளைப் படமெடுத்துக்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இரு நாள்களுக்குப் பிறகு அதுபோன்ற ‘கண்காணிப்பு நடவடிக்கை’களில் அவர் ஈடுபட்டபோது அதிகாரிகள் சம்பந்தப்பட்டோரிடம் தெரியப்படுத்தினர்.
காரில் இருந்த துப்பாக்கி
பிடிபட்டபோது தனது காரில் தோட்டாக்கள் உள்ள துப்பாக்கி இருந்ததாக டெயில் தெரிவித்தார்.
டெயில், 2008லிருந்து 2016ஆம் ஆண்டு வரை தங்கள் படையில் பணியாற்றியதாக அமெரிக்க மரீன் கார்ப்ஸ் படை தெரிவித்தது. 2008லிருந்து 2009 வரை அவர் ஈராக்கில் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் 2010ல் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்டதாகவும் அது கூறியது.
2011ல் கார்ப்பரல் பதவிக்கு உயர்ந்த டெயில், பல பதக்கங்களையும் விருதுகளையும் வென்றதாக மரீன் கார்ப்ஸ் தெரிவித்தது.


