விமான விபத்தில் குடும்ப உறுப்பினர்களை இழந்து தவிக்கும் செல்லப்பிராணி

1 mins read
0a91c67f-819e-40f8-babd-39245b48f142
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இனி வரமாட்டார்கள் என்று தெரியாமல் ‘புடிங்’ என்று அழைக்கப்படும் நாய்க்குட்டி வீட்டிற்கும் கிராமத்தின் மையப்பகுதிக்கும் அடிக்கடி நடந்து சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: கேர் அமைப்பு/இன்ஸ்டகிராம்

சோல்: அண்மையில் தென்கொரியாவில் ஜெஜு ஏர் விமானம் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளானது.

விபத்தின் காரணமாக 179 பேர் மாண்டனர்.

மாண்டோரில் ஒன்பது பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

79 வயது முதியவர், அவரது மனைவி, இரண்டு மகள்கள், மருமகன், பேத்தி, மூன்று பேரன்கள் ஆகியோர் உயிரிழந்தனர்.

முதியவரின் இன்னொரு மருமகன் இவர்களுடன் பயணம் செய்யவில்லை.

குடும்பத்தினர் அனைவருக்கும் ஏற்பட்ட நிலை அவரை நிலைகுலைய வைத்துள்ளது.

இதற்கிடையே, இந்தக் குடும்பம் செல்லமாக வளர்த்த நாய்க்குட்டி தென்கொரியாவில் யோங்வாங் பகுதியில் உள்ள கிராமத்தில் தனியாக இருக்கிறது.

பல நாள்கள் ஆகியும் உரிமையாளர்களைப் பார்க்காமல் அது தவித்ததாக அக்கம் பக்கத்தில் வசித்தவர்கள் கூறினர்.

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இனி வரமாட்டார்கள் என்று தெரியாமல் அது வீட்டிற்கும் கிராமத்தின் மையப்பகுதிக்கும் அடிக்கடி நடந்து சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதைப் பார்த்துப் பரிதாபப்பட்ட கிராமவாசிகள் அதற்கு தீனி போட்டனர்.

பராமரிக்க யாரும் இன்றி புடிங் என்று அழைக்கப்படும் அந்த நாய்க்குட்டி தனியாக கிராமத்தின் மையப் பகுதிக்கு நடந்து செல்வது பாதுகாப்பானதல்ல என்று விலங்கு உரிமைக்கான கேர் அமைப்பு தெரிவித்தது.

தனிமையில் தவிக்கும் நாய்க்குட்டியை கேர் அமைப்பு தற்போது பார்த்துக்கொள்கிறது.

நாய்க்குட்டியைப் பார்த்துக்கொள்ளக்கூடிய புதிய உரிமையாளரைத் தேடும் பணியில் அது ஈடுபட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்