அமெரிக்க தற்காப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்ட பீட் ஹெக்செத் என்பவரை அந்நாட்டு செனட் சபை உறுதிசெய்துள்ளது.
இதன்மூலம், பல தவறான நடத்தை புகார்களுக்கு ஆளாகி கிட்டத்தட்ட பதவியேற்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட பீட் ஹெக்செத் ஒருவழியாக தற்காப்பு அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக செனட் சபை குடியரசுக் கட்சியின் முன்னாள் தலைவரான மிட்ச் மிக்கோனல் உட்பட மூன்று குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் வாக்களித்தனர். எனினும், அமெரிக்க துணை அதிபர் ஜே டி வேன்ஸ் ஹெக்செத்துக்கு ஆதரவாக வாக்களித்து அவரது தற்காப்பு அமைச்சு நியமனத்தை உறுதி செய்தார்.
ஹெக்செத் நியமனத்தை உறுதி செய்யும் செனட் சபை மேற்கொண்ட விசாரணையில் அவருக்கு எதிராக பாலியல் தாக்குதல், திருமண பந்தம் தாண்டிய கள்ள உறவு, குடி என பல புகார்களை எதிர்கொண்டார்.
தற்காப்பு அமைச்சராக உறுதி செய்யப்பட்ட திரு ஹெக்செத் முன்னாள் ராணுவ வீரராவார். அத்துடன், அவர் ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்தின் நிகழ்ச்சி படைப்பாளராகவும் இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் தற்காப்பு அமைச்சராக ஏறத்தாழ US$1 டிரில்லியன் (S$1.35 டிரில்லியன்) பெறுமான வரவுசெலவு நிதியைக் கையாள்வதுடன் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ஊழியர்களை மேற்பார்வையிடும் பொறுப்பை ஏற்பார் என்பதும் நினைவுகூரத்தக்கது.
திரு மிக்கோனல் ஹெக்செத்துக்கு எதிராக வாக்களித்து அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கினார். அதைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவு, எதிர்ப்பு என 50-50 என்றிருந்த சமநிலையை துணை அதிபர் தமது வாக்கை அளித்து ஹெக்செத்தை வெற்றி பெறச் செய்தார்.
அவருக்கு எதிராக வாக்களித்த திரு மிக்கோனல் இரண்டு மில்லியனுக்குமேல் வழிநடத்தி பெரிய வரவுசெலவு நிதியுடன் கூடிய தற்காப்பு அமைச்சு பொறுப்பேற்கும் தகுதி ஹெக்செத்துக்கு இல்லை என்று கூறியுள்ளார்.