இலங்கையில் பெட்ரோல் விலை 25% அதிகரிப்பு

இலங்கையில் பெட்ரோல் விலை 25% அதிகரிப்பு

2 mins read
7ec40e2c-4e2e-410d-b2e2-c525329d8069
இலங்கை அரசாங்கம், பெட்ரோல் பயன்பாட்டைக் குறைக்க விலையை உயர்த்தியிருக்கிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

கொழும்பு: இலங்கையில் மார்ச் 22ஆம் தேதி பெட்ரோல் விலை 25 விழுக்காடு அதிகரித்தது.

இரு வாரங்களுக்குள் இரண்டாவது முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரால் ஏற்பட்டுள்ள விளைவுகளைச் சமாளிக்க இலங்கை தயாராகி வருகிறது.

பெட்ரோல் லிட்டருக்கு 398 ரூபாயாக (S$1.60) அதிகரித்தது. இது, முந்திய 310 விலையிலிருந்து கூடியது. பொதுவாக பொதுப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் டீசல் விலை 79 ரூபாய் அதிகரித்து 382 ரூபாயாகியுள்ளது.

அரசாங்கம், கடந்த வாரம் சில்லறை விற்பனைக்கான எரிபொருள் விலையை 8 விழுக்காடு உயர்த்த உத்தரவிட்டது. அது மட்டுமல்லாமல் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த பங்கீட்டு முறையை அது அறிமுகப்படுத்தியது.

“விலை அதிகரிப்பால் பயன்பாடு 15 விழுக்காடு முதல் 20 விழுக்காடு வரை குறையும் என எதிர்பார்க்கிறோம்,” என்று சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் கூறியது.

நாட்டின் எரிபொருள் விநியோகத்தைப் பாதிக்கும் நீண்டகால மத்திய கிழக்குப் பிரச்சினைக்கு நாடு தயாராவது அவசியம் என்று இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க கடந்த வாரம் தம்மிடம் தெரிவித்ததாக அது மேலும் தெரிவித்தது.

மார்ச் 18ஆம் தேதியிலிருந்து வாரம் நான்கு நாள் வேலைக்கு அதிபர் உத்தரவிட்டார்.

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஏற்பாடுகளை முடிந்தவரை நடைமுறைப்படுத்துமாறும் அவர் முதலாளிகளைக் கேட்டுக்கொண்டார்.

கச்சா எண்ணெய், திரவ எரிபொருள் விநியோகத்துக்கு முக்கியமான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் வெற்றிகரமாக முடக்கிவைத்துள்ளால் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது.

இலங்கை, இறக்குமதி செய்யப்படும் எரிபொருளையே நம்பி உள்ளது. மின்சார உற்பத்திக்கும் அது நிலக்கரியை வாங்கி வருகிறது.

சிங்கப்பூர், மலேசியா மற்றும் தென் கொரியா ஆகியவற்றிடமிருந்து சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருள்களை இலங்கை வாங்குகிறது. அதே சமயத்தில் ஈரான் உதவியுடன் கட்டப்பட்ட சுத்திகரிப்பு நிலையத்திற்கான கச்சா எண்ணெய்யை அது மத்திய கிழக்கிலிருந்து தருவிக்கிறது.

மத்திய கிழக்குப் போர் நீண்ட நாள்களுக்குத் தொடர்ந்தால் 2022ஆம் ஆண்டின் பொருளியல் மந்த நிலையிலிருந்து இலங்கை மீண்டுவருவதைக் கீழறுக்கும் என்று இலங்கை அரசாங்கம் எச்சரித்துள்ளது.

2022ஆம் ஆண்டில், இலங்கையிடம் அந்நியச் செலாவணி தீர்ந்துபோனதால் அது தனது 46 பில்லியன் அமெரிக்க டாலர் (59 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், கொழும்பு அனைத்துலகப் பண நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் மீட்பு நிதியைப் பெற்றுள்ளது.

குறிப்புச் சொற்கள்