கோலாலம்பூர்: மாநிலத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் – தேசிய முன்னணி வேட்பாளர்களுக்கு மக்களாதரவு கைகொடுக்கும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியிருக்கிறார்.
வாக்களிப்பு நாள் நெருங்கிக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட பக்கத்தான் ஹரப்பான் கட்சித் தலைவர் திரு அன்வார், மக்கள் எடுக்கும் தீர்மானத்தின் அடிப்படையில்தான் ஆதரவை மதிப்பிடமுடியும் என்று கூறினார்.
“இதுவரை பார்க்கையில், சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது மக்களிடையில் எங்களுக்கு பரவலான ஆதரவு இருப்பது தெரிகிறது.
“பக்கத்தான் – தேசிய முன்னணி வேட்பாளர்களை மக்கள் முன்பைவிட அதிகமாக ஏற்கின்றனர்,” என்று சிம்பாங் அம்பாட் அருகே செவ்வாய்க்கிழமை மக்களைச் சந்தித்த பிறகு பிரதமர் அன்வார் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறும் மாநிலத் தேர்தலுக்குப் பிறகு பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களை ஐக்கிய அரசாங்கம் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் என்ற கணிப்பு குறித்து அவரிடம் கருத்து கேட்கப்பட்டது.
கெடா, கிளந்தான், திரெங்கானு மாநிலங்களை பெரிக்கத்தான் நேஷனல் தொடர்ந்து ஆளும் என்றும் முன்னுரைக்கப்படுகிறது.
பக்கத்தான் – தேசிய முன்னணி கூட்டணியின் கொள்கைகள் தெளிவாக விளக்கப்பட்டிருப்பதால் அதன் வேட்பாளர்களுக்கு ஆதரவு கூடியிருப்பதாக திரு அன்வார் கூறினார்.
“முன்பு, எதிர்மறையான கருத்துகளே எங்களுக்குக் கேட்டன.
தொடர்புடைய செய்திகள்
“அன்வார் முஸ்லிம்களின் உரிமைகளைப் பறித்திடுவார் என்று அவர்கள் நினைத்தனர்.
“அவர் (அன்வார்) எல்லா மாணவர்களையும் அரைப்பாவாடை அணிய அனுமதிப்பார் என்றனர்.
“பழிச்சொல் கலாசாரத்தின் ஒரு பகுதியானது, ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகள் எதுவுமே நடக்கவில்லை என்பது மக்களுக்கு இப்போது தெரியும்.
“அதனால் எங்களுக்கான ஆதரவில் சாதகமான மாற்றம் ஏற்பட்டிருக்கிறது,” என்று திரு அன்வார் கூறினார்.
மாநிலத் தேர்தல் நடைபெறும் ஆறு மாநிலங்களிலும் செவ்வாய்க்கிழமை காலை எட்டு மணிக்கு 260 வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் முன்கூட்டியே வாக்களிக்கத் தொடங்கினர்.

