ஃப்ளோர்ஸ்டாட், ஜெர்மனி: மருந்துகள் வலியைப் போக்கவும், புற்றுநோயை எதிர்த்துப் போராடவும், உயிர்களைக் காப்பாற்றவும் முடியும். ஆனால், அவை அஞ்சலில் தொலைந்து போனாலோ, வெப்பமான கிடங்கில் கெட்டுப்போனாலோ, கப்பலில் சிக்கிக்கொண்டாலோ பயனற்றவையாகிவிடும்.
போர், பெருந்தொற்று மற்றும் வர்த்தகக் குழப்பங்களால் முக்கிய விநியோகச் சங்கிலிகள் ஆட்டம் கண்டுள்ள உலகில், வேகமாக வளர்ந்து வரும் துறையான மருந்துப் பொருள் விநியோகம் இங்குதான் முக்கியத்துவம் பெறுகிறது.
ஜெர்மனியின் ஃபிராங்பர்ட்டுக்கு அருகில் உள்ள டிஎச்எல் (DHL) நிறுவனத்தின் சுகாதாரத் தளவாட வளாகம் அதன் ஐரோப்பிய மையங்களில் ஒன்றாக விளங்குகிறது. இது, மருந்துகள் மற்றும் பிற முக்கிய மருத்துவப் பொருள்கள், தேவைப்படும் இடங்களுக்கு நம்பகத்தன்மையுடன் சென்றடைவதை உறுதிசெய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் ஐந்து வாரங்களாக நீடித்து வரும் போருக்கு மத்தியில், மருந்துத் தட்டுப்பாடு குறித்த அச்சங்கள் அதிகரித்து வருவதால், ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் உள்ள மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆய்வகங்கள் மற்றும் பிற வாடிக்கையாளர்களுக்குச் சீரான விநியோகத்தை உறுதிசெய்வதே அதன் பணியாகும்.
“விநியோகச் சங்கிலியின் இறுதியில் நோயாளிதான் இருக்கிறார் என்பதையும், எந்தத் தவறும் அனுமதிக்கப்படாது என்பதையும் எங்கள் ஊழியர்கள் 600 பேரும் அறிந்துள்ளனர். ஏனெனில், அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது,” என்று ஜெர்மனி மற்றும் ஆல்பைன் நாடுகளில் உள்ள டிஎச்எல் நிறுவனத்தின் தளவாடப் பிரிவின் தலைவர் கேட்ரின் ஹோல்டர் கூறினார்.
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்தும் போர் உலகளாவிய கப்பல் போக்குவரத்தைப் பாதித்து வருவதால், “உற்பத்திக்கு அத்தியாவசியமான மூலப்பொருள்கள் கிடைப்பதை உறுதிசெய்வதற்காக, சில வாடிக்கையாளர்கள் தங்களின் சேமிப்புக் கிடங்குகளை இங்கு அதிகரிக்கக் கோருவதை நாங்கள் காண்கிறோம்,” என்று அந்த இடத்தைப் பார்வையிட்டபோது அவர் ஏஎஃப்பியிடம் கூறினார்.
“உலகளாவிய விநியோகச் சங்கிலிகளின் பலவீனமானது ஒரு தொடர்ச்சியான கவலையாகவே இருந்து வருகிறது. இருப்பினும், சிக்கல் நிறைந்த ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்தைவிட, திறந்தே இருக்கும் சூயஸ் கால்வாயையே ஃப்ளோர்ஸ்டாட் தளம் அதிகம் சார்ந்துள்ளது,” என்று திருவாட்டி ஹோல்டர் கூறினார்.
மீண்டும் மீண்டும் ஏற்படும் உலகளாவிய நெருக்கடிகள் இருந்தபோதிலும், மருந்துத் துறையைப் போலவே தளவாடத் துறையும் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
சுகாதாரத் தரவுப் பகுப்பாய்வு நிறுவனமான இக்வியாவின் கூற்றுப்படி, அமெரிக்கா மற்றும் முக்கிய வளர்ந்து வரும் சந்தைகளின் உந்துதலால், உலகளாவிய மருந்துச் சந்தை 2030ஆம் ஆண்டிற்குள் 2.6 டிரில்லியன் அமெரிக்க டாலரைத் ($3.35 டிரில்லியன்) தாண்டக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

