மணிலா: பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் 2027ஆம் ஆண்டிற்கான 6.793 டிரில்லியன் பெசோ ($118 பில்லியன்) மதிப்பிலான வரவுசெலவுத் திட்டத்தை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளார்.
வரவுசெலவுத் திட்டத்தை அமல்படுத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நாட்டின் பொருளியல் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதும், ஏழ்மையைக் குறைப்பதுமே வரவுசெலவுத் திட்டத்தின் முதன்மை நோக்கம் என்று திரு மார்கோஸ் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தைவிட அடுத்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டம் 7.4 விழுக்காடு அதிகமாகும்.
கல்வி, சுகாதாரம், சமூக நலத்துறை ஆகிய முக்கியத் துறைகளுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காகவும் பெரிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேளாண் துறைக்கும், ராணுவத்தின் தற்காப்புத் திறனை வலுப்படுத்தத் தற்காப்புத் துறைக்கும் குறிப்பிடத்தக்க அளவிலான நிதி பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் கடன் சுமையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் அதே வேளையில், நாட்டின் பொருளியல் வளர்ச்சியை 6.5 முதல் 8 விழுக்காடுவரை உயர்த்த புதிய வரவுசெலவுத் திட்டம் பெரும் உதவியாக இருக்கும் என அதிபர் மார்கோஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


