மணிலா: பிலிப்பீன்சில் பெரிதும் தேடப்பட்டு வந்தவர்களை அதிகாரிகள் நெருங்கி விட்டதால் செப்டம்பர் மாதம் பல்வேறு கைது நடவடிக்கைகள் இடம்பெற்றன. அவர்களில் சிலர் முன்னைய டுட்டர்டெ நிர்வாகத்தின் இறுதி காலத்தில் கைது செய்யப்படுவதிலிருந்து தவிர்த்தனர்.
கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குள் ஆறு உயர்மட்ட சந்தேக நபர்களை அரசாங்கம் கைது செய்தது. இது பாராட்டுக்குரியது என்று பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால், அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், அவரது முன்னோடி ரோட்ரிகோ டுட்டர்டெ மற்றும் அவரது மகளான துணை அதிபர் சாரா டுட்டர்டெயுடன் கூட்டணி நிலைத்திருந்தால் அது நடந்திருக்காது என்றும் நிலைமை அப்படியே இருந்திருக்கும் என்றும் அவர்கள் கருத்துரைத்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் நான்கு பேர், வாரக்கணக்கில் அல்லது மாதக்கணக்கில் அமலாக்க அதிகாரிகளிடமிருந்து தப்பித்து வந்துள்ளனர். திரு மார்கோசும் டுட்டர்டெகளும் இனி நண்பர்கள் அல்லர் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரே, சட்ட அமலாக்க அதிகாரிகளால் தப்பியோடியவர்கள் வளைக்கப்பட்டனர்.
“டுட்டர்டெகளுக்கு எதிராக மார்கோஸ் தாக்குதல் நடத்துவதை நான் பார்க்கிறேன்,” என்று அட்னியோ டி மணிலா பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறைத் தலைவர் டாக்டர் கார்மெல் அபாவ்,ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
“நாங்கள் நல்லவர்கள். எது சரியோ அதை நாங்கள் சரியாகச் செய்கிறோம் என்று ஒரு விஷயத்தைத் தெளிவாக முன்வைக்க திரு மார்கோஸ் இவ்வாறு செய்கிறார்,”என்று டாக்டர் கார்மெல் மேலும் கூறினார்.
சீனாவின் உளவாளி என்று குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மேயர் எலிஸ் குவோ, சர்ச்சைக்குரிய சமய போதகர் அப்பல்லோ குய்போலோய், வரவுசெலவுத் திட்டத்தின் முன்னாள் துணைச் செயலாளர் லாய்ட் கிறிஸ்டஃபர் லாவ், திரு டுட்டர்டெயின் முன்னாள் பொருளியல் ஆலோசகர் மைக்கல் யாங்கின் சகோதரரான சீன தொழிலதிபர் டோனி யாங், முன்னாள் பலவான் மாநில ஆளுநர் ஜோயல் ரெய்ஸ், பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் காவல்துறை அதிகாரி ஆலன் டி கெஸ்ட்ரோ ஆகியோரே அண்மையில் கைது செய்யப்பட்ட அந்த ஆறு பெரும்புள்ளிகள்.

