ஜெனரல் சன்டோஸ்: திங்கட்கிழமை (ஜூன் 8) பிலிப்பீன்சில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அதன் தென்மாநிலமான ஜெனரல் சன்டோஸ் நகர் பெரும் பாதிப்புக்கு உள்ளானது.
இதுவரை அந்தப் பேரிடரில் மரண எண்ணிக்கை 37ஐ எட்டிய நிலையில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் ஜெனரல் சன்டோஸ் நகரில் இடிந்து விழுந்துள்ள கட்டடங்களில் மேலும் இருவரைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.
ஒரு வர்த்தகக் கட்டடத்தில் இருந்து இருவர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் மற்றொருவரின் சடலத்தை வெளியில் எடுத்ததாகவும் வட்டாரத் தீயணைப்பு அதிகாரி எட்கார் தனவான் ஊடகத்திடம் தெரிவித்தார். அந்தக் கட்டடத்தில் மேலும் இருவர் சிக்கியிருப்பதாக நம்பப்படுகிறது.
ஆயினும் அவர்கள் உயிருடன் இருப்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார். கட்டட இடிபாடுகளில் சிக்கியோரைக் கண்டறியும் உணர்கருவிகள் இதுவரை ஆதாரம் எதனையும் கண்டறியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
ரிக்டர் அளவில் 7.8 என்று பதிவான நிலநடுக்கத்தில் அண்டை நாடுகளில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. அத்தகு கடுமையான நிலநடுக்கத்தில் மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் 400 பேர் வரை காயமடைந்துள்ள நிலையில் மேலும் நால்வரைக் காணவில்லை.
ஜெனரல் சன்டோஸ் நகரின் மக்கள்தொகை ஏறத்தாழ 700,000 ஆகும். அந்நகரே தற்போது நிலைகுலைந்து பல கட்டடங்கள் இடிந்துவிழுந்த நிலையில் மின்சார விநியோகம் தட்டுப்பட்டு அடிப்படை வசதிகளை இழந்து மக்கள் தவித்துவருகின்றனர்.
அடிப்படை வசதிகளுக்கான தட்டுப்பாடு
பிலிப்பீன்சின் பேரிடர் நிர்வாக அதிகாரிகள், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட்டு, மின் விநியோகத்தை மீட்டு ஆயிரக்கணக்கான மக்களுக்குக் குடிநீர் வசதிகளை ஏற்பாடு செய்வதில் முழுவீச்சில் ஈடுபட்டுவருகின்றனர்.
அருகில் உள்ள சரங்கனி மாநிலம் உட்பட, காயமடைந்தவர்களுக்குத் தற்காலிக முகாம்களில் அவசர சிகிச்சை வழங்கப்பட்டுவகிறது. மாநில மருத்துவமனைகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டு வருவதால் இந்தத் தற்காலிக நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

