பிலிப்பீன்ஸ் படகு விபத்து; முதன்முறையாக உடல்கள் கொண்டுவரப்பட்டன

பிலிப்பீன்ஸ் படகு விபத்து; முதன்முறையாக உடல்கள் கொண்டுவரப்பட்டன

1 mins read
3ca25a9f-622a-4dfb-8866-7358813144ca
தீ விபத்துக்குள்ளான எம்வி ஜூன் அஸ்டர் ஃபெரி படகு. - படம்: ராய்ட்டர்ஸ்

கொரோன் (பிலிப்பீன்ஸ்): பிலிப்பீன்சில் நிகழ்ந்த படகு விபத்தில் மாண்டோர் சிலரின் உடல்கள் முதன்முறையாகக் கரைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

சனிக்கிழமை (செப்டம்பர் 12) காலை அவ்வுஉடல்கள் அந்நாட்டின் சுற்றுலாத்தலமான கொரோனுக்கு அருகே துறைமுகம் ஒன்றுக்கு எடுத்துவரப்பட்டன. சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35க்குக் கூடியுள்ளதாகவும் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் பிலிப்பீன்சின் கரையோரக் காவற்படை தெரிவித்தது.

விபத்துக்குள்ளான எம்வி ஜூன் அஸ்டர் படகிலிருந்து 30 சடலங்கள் வரை பெற்றுக்கொள்வதற்காக அமைக்கப்பட்ட முகாம்களை ஏஎஃப்பி செய்தி நிறுவனம் பார்வையிட்டது. கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 9) அப்படகில் மூண்ட தீ சில வினாடிகளில் பரவியதாகத் தெரிவிக்கப்பட்டது.

உடல்களைச் சரிவரக் கையாண்டு அடையாளம் காண காவல்துறைத் தடயவியல் விசாரணை அதிகாரிகளிடம் அவை ஒப்படைக்கப்படும் என்றும் கரையோரக் காவற்படைப் பேச்சாளர் நோவேமி கயாப்யாப் வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட குடும்பத்தாரிடம் தெரியப்படுத்த உள்ளூர் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போது உடல்களை மீட்பதில் கவனம் செலுத்தப்படுவதாகவும் பிறகு விசாரணை தொடங்கும் என்றும் அவர் சொன்னார். செய்தியாளர் கூட்டம் முடிந்தவுடன் காவல்துறை விசாரணை அதிகாரிகள் துறைமுகத்தைச் சென்றடைந்ததாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
உலகம்பிலிப்பீன்ஸ்விபத்துதீமீட்புமரணம்உயிரிழப்பு