மணிலா: ஃபேஸ்புக் நிறுவனம் அதன் தளங்களில் பகிரப்படும் பொய்ச்செய்திகளை உடனடியாகத் தடை செய்யவேண்டும், தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிலிப்பீன்ஸ் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பலவகையான தீங்கு விளைவிக்கும் பதிவுகள் இணையத்தில் அடையாளம் காணப்பட்டதாக அதிபரின் தொடர்புத் துறை அலுவலகம் சனிக்கிழமை (ஏப்ரல் 11) தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக் போன்ற பல சமூக ஊடகத் தளங்களை மெட்டா நிறுவனம் இயக்குகிறது.
மெட்டா நிறுவனம் பொய்யான, பதற்றத்தைத் தூண்டும் உள்ளடக்கங்கள் கொண்ட பதிவுகளை உடனடியாகக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஏழு நாள்களுக்குள் இதன் தொடர்பில் விரிவான நடவடிக்கைத் திட்டத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் குறித்தும் மூத்த அரசாங்க அதிகாரிகள் பற்றியும் போலியான ஆவணங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டன. அவர்கள் உடல்நலம் குன்றியதாகவும் மரணமடைந்ததாகவும் செய்திகள் பரவின. எரிவாயு விநியோகத் தடை, ராணுவ நடவடிக்கைகள், நிதி நிறுவனங்கள், கட்டண வசூல் திட்டங்கள் குறித்தும் பல பொய்யான விவரங்கள் பதிவிடப்பட்டன.

