கோலாலம்பூர்: மலேசியாவில் பிறப்புச் சான்றிதழ் மோசடி தொடர்பில் பல இடங்களில் மருந்தகங்களை நடத்தி வரும் டத்தோஸ்ரீ பட்டம் பெற்ற மருத்துவர், ஒரு வழக்கறிஞர் உட்பட 16 பேர் சிக்கியுள்ளனர்.
மலேசிய குடிமக்கள் அல்லாதவர்களுக்கு மலேசியர்களாக பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்ட மோசடியில் அவர்கள் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது. இதற்காக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டதாகவும் அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் தரகராகச் செயல்பட்ட ஒரு வழக்கறிஞர் உட்பட முக்கிய பிரமுகர்கள் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
புலனாய்வுத் துறை கடந்த ஓராண்டாக மேற்கொண்ட விசாரணையில் சேகரித்த விவரங்களின் அடிப்படையில், இதர அரசாங்க அமைப்புகளின் ஒத்துழைப்புடன் பிறப்புச் சான்றிதழ் மோசடிகளைக் கண்டுபிடித்தது.
சந்தேக நபர்கள் அனைவரும் 20 முதல் 70 வயதுக்கு உட்டபட்டவர்கள்.
‘ஆபரேஷன் அவுட்லாண்டர்’, ‘ஆபரேஷன் பர்த்’ என்ற இரண்டு பெயர்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணியிலிருந்து 8.00 மணி வரை அவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணைத் தலைவரான ஆணையர் அஹமட் குசைரி யஹாயா, கிள்ளானிலும் ஜோகூரிலும் உள்ள பல மருந்தங்கள், சட்ட அலுவலகங்கள் உட்பட பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாகக் கூறினார்.
“ஆபரேஷன் அவுட்லாண்டர் நடவடிக்கையில் பிறந்து 60 நாட்களுக்கு பிறகு சமர்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் தாமதமான பிறப்புப் பதிவுகளை எளிதாக்கியதாக நம்பப்படும் முக்கிய சந்தேக நபர் ஒரு அரசாங்க ஊழியர்,” என்று அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
பல மருத்துவமனைகளை வைத்திருக்கும் மருத்துவச் சேவைவழங்குநர் ஒருவர் போலி பிறப்பு சான்றிதழ் ஆவணங்களை வழங்கியதாக சந்தேகிக்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.
ஆபரேஷன் பர்த் நடவடிக்கையில் முகவர்களாகச் செயல்பட்ட மூன்று முக்கிய சந்தேக நபர்கள் பிறப்புப் பதிவுகளை செயல்படுத்த ஒரு அரசு ஊழியருக்கு 18,000 ரிங்கிட் வரை லஞ்சம் வழங்கியதாக நம்பப்படுகிறது.
பிறப்புச் சான்றிதழ் கோரும் விண்ணப்பங்களுடன் பிறப்பை உறுதிப்படுத்தும் மருத்துவமனையின் கடிதங்கள் உள்ளிட்டவை போலி ஆவணங்களாக இணைக்கப்பட்டன.
முகவர்களின் சேவைகளைப் பயன்படுத்திய விண்ணப்பதாரர்கள் ஆறு பேரும் கைதாகியுள்ளனர்.
“மோசடியில் இடைத்தரகராக செயல்பட்டதாக நம்பப்படும் ஒரு வழக்கறிஞரையும் நாங்கள் கைது செய்தோம்,” என்று திரு அஹமட் குசைரி தெரிவித்தார்.
இரண்டு பேரைத் தவிர, 16 சந்தேக நபர்களையும் ஊழல் தடுப்பு ஆணையம் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகிறது.