ஜோகூர் பேருந்துகளில் சிங்கப்பூரர்களைக் குறிவைக்கும் ‘பிக்பாக்கெட்’ திருடர்கள்

ஜோகூர் பேருந்துகளில் சிங்கப்பூரர்களைக் குறிவைக்கும் ‘பிக்பாக்கெட்’ திருடர்கள்

2 mins read
1f9a5a9e-958c-4afc-8b7a-5e60609942fd
திருடர்கள் மூன்று முதல் ஐந்து பேர் கொண்ட குழுக்களாகப் பிரிந்து பேருந்துகளில் ஏறி, மறைக்க முதுகில் உள்ள பைகளை ஒரு மறைப்பாகப் பயன்படுத்தி பயணிகளின் விலை உயர்ந்த பொருள்களைத் திருடுவதாக ஜோகூரின் சின் சியூ நாளிதழிடம் தெரிவிக்கப்பட்டது. - படங்கள்: சின் சியூ நாளிதழ்

ஜோகூர் பாரு: ஜோகூர் பாரு மற்றும் மலேசியாவின் பிற பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளில் ‘பிக்பாக்கெட்’ திருடர்கள் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருவதாகவும் அவர்கள் வெளிநாட்டு ஊழியர்கள், சிங்கப்பூரர்கள் அல்லது உள்ளூர் முதியவர்களைக் குறிவைப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தத் திருடர்கள் மூன்று முதல் ஐந்து பேர் கொண்ட குழுக்களாகப் பிரிந்து பேருந்துகளில் ஏறி, மறைக்க முதுகில் உள்ள பைகளை ஒரு மறைப்பாகப் பயன்படுத்தி பயணிகளின் விலை உயர்ந்த பொருள்களைத் திருடுவதாக ஜோகூரின் சின் சியூ நாளிதழிடம் தெரிவிக்கப்பட்டது.

பேருந்துப் பயணிகள் இவர்களது செயல்கள் குறித்து மற்றவர்களை எச்சரிக்க முயன்றபோது, அந்தத் திருடர்கள் அவர்களைத் தங்கள் விவகாரங்களில் தலையிடாமல் அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டு போகும்படி கூறியதாக சின் சியூ நாளிதழ் தெரிவித்துள்ளது.

“திருடர்கள் வழக்கமாக நன்றாக உடையணிந்து, தொப்பி அணிந்து, முதுகுப்பைகளை வைத்திருப்பார்கள்,” என்று 52 வயது பயணியான ஃபாங் என்பவர் சின் சியூவிடம் கூறினார்.

வெளிநாட்டினர் பலர் வாரயிறுதிகளிலும் பொது விடுமுறை நாள்களிலும் ஜோகூர் பாருவிலிருந்து கடைத்தொகுதிகளுக்குப் பேருந்து மூலம் செல்வது வழக்கம். இவர்களை இத்திருடர்கள் குறிவைப்பதாகப் பயணிகள் கூறினர்.

“பயணிகள் கவனக் குறைவாக இருக்கும் நேரத்தில் அவர்களது கைப்பேசி அல்லது பணப்பையைத் திருடர்கள் திருடுகின்றனர்,” என்று ஃபாங் கூறினார்.

கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இரவு நேரத்தில் தனியாகப் பேருந்தில் பயணம் செய்தபோது தமது வலது கால்சட்டைப் பையிலிருந்து கடவுச்சீட்டு திருடப்பட்டதாக 62 வயது பயணி ஒருவர் பகிர்ந்துகொண்டார்.

மேலும், நீண்ட தூரப் பேருந்துப் பயணங்களிலும் இந்தத் திருடர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டுவதாக மற்றொரு பயணி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, பேருந்துகளில் நடக்கும் திருட்டுச் சம்பவங்கள் குறித்து எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை என்று ஜோகூர் பொதுப் போக்குவரத்து ஆணையத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி சின் சியூ நாழிதழிடம் தெரிவித்தார்.

இந்தச் சம்பவங்கள் குறித்து அறிந்ததும், அவர் பேருந்து நிறுவனத்தைத் தொடர்புகொண்டு பேருந்தின் உள்ளே உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை விசாரணைக்காக ஆராயுமாறு கேட்டுக்கொண்டதாக சின் சியூ செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தைத் தொடர்ந்து கண்காணிக்க அவர் உறுதியளித்ததாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்