கெய்ரோ: சவூதி அரேபியாவின் மெக்கா நகருக்கு புனித ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளவர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கடும் வெப்பம் தாளாமல் உயிரிழந்தனர்.
மெக்காவுக்கு எப்படியாவது சென்றாக வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர், சட்டவிரோதமாக செயல்படும் சுற்றுலா நிறுவனங்கள், கடத்தல்காரர்கள், குண்டர்களின் உதவியை நாடுகின்றனர். அவர்களிடம் பெருந்தொகையையும் யாத்திரைக்காக மக்கள் தருகின்றனர்.
தற்போது ஹஜ் யாத்திரையில் மாண்டவர்களில் பெரும்பாலானவர்கள் சட்டவிரோதமாக செயல்படுவர்களின் உதவியை நாடியவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரியாக முன்பதிவுகள் செய்துகொண்டு மெக்கா செல்லும் யாத்ரிகர்களுக்கு தகுந்த போக்குவரத்து வசதிகள், குளிர்சாதன வசதிகள் உள்ள பேருந்துகள், கூடாரங்கள் வழங்கப்படும்.
சட்டவிரோதமாக வருபவர்களுக்கு இந்த வசதிகள் இல்லை. இதனால் அவர்கள் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் வெப்பம் தாங்காமல் வீதிகளில் மயங்கி கீழே விழுந்தனர். ஹஜ் யாத்திரையின் போது வெப்பநிலை 49 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் பதிவானது. இது நிலைமையை மேலும் மோசமாக்கியது.
இது குறித்து சவூதியின் சுகாதாரத்துறை அமைச்சர் ஃபகத் பின் அப்துர்ரஹ்மான் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23) அறிக்கை வெளியிட்டார்.
ஹஜ் யாத்திரையில் 1,300க்கு மேற்பட்டவர்கள் மாண்டனர். அவர்களில் 83 விழுக்காட்டினர் பதிவு செய்யாமல் ஆவணங்கள் இன்றி மெக்கா வந்தவர்கள் என்றார் அவர்.
“இம்முறை ஹஜ் யாத்திரை காலத்தில் வெப்பநிலை அதிகமாக இருந்தது. அது பெரும் சவாலாக இருந்தது. மாண்ட சம்பவங்கள் கவலை தருகிறது. ஹஜ் அனுமதி ஆவணங்கள் இல்லாதவர்கள் கடுமையான வெயிலில் நீண்ட நேரம் நடந்தனர். அது அவர்களுக்கு ஆபத்தாக மாறியது,” என்று அப்துர்ரஹ்மான் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
ஹஜ் யாத்திரையில் ஏற்பட்ட மரண சம்பவங்கள் குறித்து சவூதி அரேபியா அமைதிகாத்து வந்த நிலையில் தற்போது அந்நாட்டு சுகாதாரதுறை அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆண்டுக்கு 2 மில்லியன் முஸ்லிம் யாத்ரிகர்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்கின்றனர். யாத்திரை செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் மூத்தோர். ஹஜ் யாத்திரையில் வெப்பம், உடல்நலக் கோளாறு உள்ளிட்டவற்றால் மரண சம்பவங்கள் ஏற்படுவது வழக்கம். ஆனால் இவ்வாண்டு அந்த எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பதிவு செய்யாமல் ஹஜ் யாத்திரை மேற்கொள்பவர்களையும் அவர்களுக்கு சட்டவிரோதமாக உதவும் நபர்களை ஒடுக்கவும் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கவனிப்பாளர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

