தோக்கியோ: சிங்கப்பூரிலிருந்து கன்சாய் பகுதிக்கு ஜனவரி 7ஆம் தேதி ஜப்பானின் பீச் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று வந்தது.
அதன் விமானி விமானப் பயணத்துக்குக் கிட்டத்தட்ட 12 மணிநேரத்திற்குமுன் மதுபானம் அருந்தக்கூடாது எனும் விதியை மீறியதாகக் கூறப்படுகிறது. அதற்காக அந்த விமானிக்கும் விமான நிறுவனத்திற்கும் ஜப்பானின் பொது விமானப் போக்குவரத்து அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவர் ஒரு லிட்டர் மதுபானம் குடித்ததாகவும் விமானப் பயணத்துக்கு முன்னதாக விமானிகளுக்கு நடத்தப்படும் மதுபானச் சோதனையையும் அவர் மேற்கொள்ளவில்லையெனவும் ஜப்பானின் நிலம், உள்கட்டமைப்பு, போக்குவரத்து, சுற்றுலா அமைச்சு பிப்ரவரி 14ஆம் தேதி வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்தது.
மேலும், இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க பீச் விமான நிறுவனம் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு மார்ச் 7ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.