துபாய்: ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிலிருந்து இஸ்ரேலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த விமானம் ஒன்று சவூதி அரேபியாவுக்கு மாற்றிவிடப்பட்டது.
விமானிகளுக்கு இடையே சண்டை மூண்டதைத் தொடர்ந்து அவசர எச்சரிக்கை சமிக்ஞை வெளியிடப்பட்டதால் அந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் புதன்கிழமை (செப்டம்பர் 30) தெரிவித்தார்.
‘ஃபிளைதுபாய்’ விமானம் எஃப்இஸெட்1073, துபாயிலிருந்து ஜோர்தானிய ஆகாயப் பகுதிவழி சென்றுகொண்டிருந்தபோது மாற்றிவிடப்பட்டது. முதலில் பொது அவசர எச்சரிக்கை சமிக்ஞை வெளியிடப்பட்டது. சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் அவசர எச்சரிக்கை சமிக்ஞை வெளியிடப்பட்டதாக விமானப் பயணக் கண்காணிப்பு இணையத்தளமான ‘ஃபிளைட்ரேடார்24’ல் தெரிவிக்கப்பட்டது.
அந்த போயிங் 737 வகை விமானம் பின்னர் மறுபடியும் பொது அவசர எச்சரிக்கை சமிக்ஞையை வெளிப்படுத்தியது. பிறகு அது வடமேற்கு சவூதி அரேபியாவில் உள்ள தாபுக் விமான நிலையத்தில் தரையிறங்கியதாக ஃபிளைட்ரேடார்24 தெரிவித்தது.
விமானத்தில் இருந்த பயணிகள், விமானிகள் சண்டையில் ஈடுபட்டபோது அவர்களைப் பிரிக்க முயற்சி செய்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்தன. விமானிகளில் ஒருவர் விமானத்தை கீழே செலுத்தி தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தாரா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்திவருவதாகச் சில தகவல்கள் தெரிவித்தன.
மற்றொரு விமானி அதைத் தடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. டி-சட்டையில் ரத்தத்துடன் பயணி ஒருவர் இருக்கும் நிழற்படங்களும் வெளியிடப்பட்டன.
முதல் எச்சரிக்கை சமிக்ஞைக்கு முன்னர் விமானம் திடீரென்று 30 நொடிகளில் கிட்டத்தட்ட 4,300 மீட்டர் கீழிறங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
பயணிகள் அனைவரும் பாதுகாப்பாய் இருப்பதாக விமான நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார். அந்த விமானத்தில் கிட்டத்தட்ட 180 பயணிகள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் இஸ்ரேலியர்கள்.
நிலைமை கட்டுக்குள் இருப்பதாக இஸ்ரேலியப் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. இஸ்ரேலியப் பயணிகளை மீண்டும் தாயகத்திற்கு அழைத்துவர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அது குறிப்பிட்டது.
காயமுற்ற விமானியும் துணை விமானியும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகத் தாபுக் விமான நிலையம் தெரிவித்தது.
ஃப்ளைதுபாய் நிறுவனம், துபாய்க்கும் டெல் அவிவுக்கும் இடையே அன்றாடம் விமானச் சேவைகளை வழங்குகிறது.
சவூதி அரேபியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகாரபூர்வ அரசதந்திர உறவுகள் இல்லை. இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கும் இடையிலான விமானம் சவூதி அரேபியாவில் தரையிறங்குவது இது முதல் முறையன்று.
சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம், துபாயில் இருந்து டெல் அவிவ் சென்ற ஃப்ளைதுபாய் விமானம் ஒன்று, மருத்துவ அவசரநிலை காரணமாக ரியாதில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
