மான்ட்ரியல்/புதுடெல்லி: ஈரான் போர் நிகழும் வேளையில் மத்திய கிழக்கு வட்டாரத்தில் விமானத்தை ஓட்டுவது பற்றிக் கவலைப்படும் விமானிகள், அந்தப் பணியை ஏற்காவிடில் சம்பளத்தையும் வேலையையும் இழக்கும் அபாயம் இருப்பதாக அனைத்துலக விமானிகள் சங்கக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளனர்.
லெபனான் முதல் இந்தியா வரையில் விமானிகளிடம் அத்தகைய கவலையும் அச்சமும் நிலவுவதாகக் கூட்டமைப்பின் தலைவர் ரோன் ஹே தெரிவித்துள்ளார்.
வானூர்தி அல்லது ஏவுகணைத் தாக்குதல்களால் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வான்வெளி மூடப்படக்கூடிய, பெரும்பாலும் கணிக்கமுடியாத சூழ்நிலைகளில் விமானத்தைச் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது என்றும் அந்தப் பணியை ஏற்காவிட்டால் பல்வேறு விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் விமானிகள் அச்சம் தெரிவித்ததாக அவர் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு முதன்முதலாக அளித்த பேட்டியில், விமான நிறுவனங்கள் தங்களைப் பழிவாங்கலாம் என்ற உள்ளார்ந்த அச்சம் விமானிகளிடம் இருப்பதாக திரு ஹே தெரிவித்தார்.
அமெரிக்காவும் ஈரானும் இரு வாரக் காலப் போர்நிறுத்தம் அறிவித்துள்ள வேளையில் மத்திய கிழக்கு வட்டாரத்தில் உள்ள சில விமான நிறுவனங்கள் விமானச் சேவைகளை மீண்டும் தொடங்குவதில் கவனம் செலுத்தி வருகின்றன. அப்படிப்பட்ட நிலையில், விமானிகளின் அச்சமும் கவலையும் வெளியாகி உள்ளன.
திரு ஹே டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானியாக உள்ளார்.
சில விமானிகளுக்கு வேலை பறிபோகாது என்ற நிலையிலும், அவர்களின் மேலாளர்கள் வழங்கும் தகவல்கள் கவலைக்குரியவை என்று அவர் குறிப்பிட்டார்.
தயக்கம் காட்டும் விமானிகளிடம், “இந்தப் பயணத்தை நீங்கள் மேற்கொள்ளவும் வேண்டாம் அதற்கான சம்பளத்தையும் நீங்கள் பெறவேண்டாம் என மேலாளர்கள் கூறுவதுண்டு,” என்றார் திரு ஹே.
தொடர்புடைய செய்திகள்
அவ்வாறு விமானிகளுக்குக் கவலை ஏற்படுத்தும் விமான நிறுவனங்களின் பெயர்களை அவர் குறிப்பிடவில்லை.
இருப்பினும், ஒரு நேர்மறையான பாதுகாப்புக் கலாசாரத்தை எவ்வாறு நடத்தக்கூடாது என்பதற்கு இவை தகுந்த உதாரணங்கள் என்றார் அவர்.
மத்திய கிழக்கு வட்டாரத்தில் அந்தக் கலாசாரம் நீண்டகாலமாகவே பின்பற்றப்படுவதில்லை. மோதல் நிகழ்ந்துவரும் வேளையில் அது மோசமடைந்துள்ளது என்று திரு ஹே மேலும் கூறினார்.

