பினாங்கு: பினாங்கு கடற்பகுதி மீண்டும் இளஞ்சிவப்பு நிறமாக மாறியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் தேசியப் பூங்காவில் நடந்துகொண்டிருந்தபோது தெலுக் பாஹாங்கில் நீர் இளஞ்சிவப்பு நிறமாக இருந்ததைப் பார்த்ததாக கடல், கடலோர ஆய்வுகளுக்கான நிலையத்தின் துணை இயக்குநர் டாக்டர் ஏனட் ஜெயராம் கூறினார்.
நீர் எப்போது நிறம் மாறும் என்பதைக் கணிக்கமுடியாது. அது வானிலையைப் பொறுத்தது என்று டாக்டர் ஏனட் கூறினார். அண்மையில் பெய்த மழையால் பாசி உருவானதாகவும் அவர் கூறினார். மழை பெய்யும்போது கடலுக்குள் ஊட்டச்சத்துகள் செல்கின்றன. அதனால் பாசிகள் வளர்கின்றன. அப்போதுதான் இத்தகைய நிகழ்வைக் காணமுடியும் என்றார் அவர்.
ஏப்ரல் மாதத்தில் பினாங்கைச் சுற்றிய கடற்பகுதியில் இளஞ்சிவப்பு நிறத்திலான பாசிகளைக் காணமுடிந்ததாக தி ஸ்டார் தெரிவித்திருந்தது.
இவையும் அதே இளஞ்சிவப்பு நிறத்திலான பாசிகள் என்று டாக்டர் ஏனட் கூறினார். அந்தப் பாசி கடல் உயிரினங்களுக்கு மிரட்டல் விளைவிக்காது என்று விஞ்ஞானிகள் கூறினர். கடல் நீர் நீண்டகாலம் இளஞ்சிவப்பு நிறமாக இருக்காது என்றும் ஓரிரு நாள்களில் அது நிறம் மாறிவிடும் என்றும் டாக்டர் ஏனட் நம்புகிறார்.
அது ஆபத்தல்ல என்றும், பினாங்கைச் சுற்றி பிடிக்கப்பட்ட மீன்கள் உட்கொள்வதற்குப் பாதுகாப்பானவை என்றும் தெரிவிக்கப்பட்டது.

