மற்ற கட்சிகளிலும் உறுப்பினர்களாக இருந்தோரை நீக்கிய ‘பிகேஆர்’

2 mins read
823e8cff-87be-433e-addb-f564a79e471f
பிகேஆர் தலைமைச் செயலாளர் ஃபுஸியா சாலே. - கோப்புப் படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: மலேசியாவின் பிகேஆர் (PKR) எனும் பார்டை கெஅடிலான் ரக்யாட் கட்சி, ஒரே நேரத்தில் மற்ற கட்சிகளிலும் உறுப்பினர்களாக இருந்த காரணத்திற்காக வாக்களித்து தேர்வு செய்யப்பட்ட தலைவர்கள் உள்ளிட்ட 28 பேரை நீக்கியுள்ளது.

பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைவராக இருக்கும் அக்கட்சியின் தலைமைச் செயலாளர் ஃபுஸியா சாலே, ஃபிரீ மலேசிய டுடே ஊடகத்திடம் அதனைத் தெரிவித்தார் என்று மலாய் மெயில் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

கட்சிக் கிளைத் தேர்தலுக்கு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க நடந்த முதற்கட்ட முன்மொழியும் நடவடிக்கைக்குப் பிறகு இரு கட்சிகளில் உறுப்பினர்களாக இருப்பதாக அடையாளம் காணப்பட்ட 36 உறுப்பினர்கள் குறித்து மறுபரிசீலனை செய்யப்பட்டதென அவர் கூறினார். அந்த 36 பேரில் 11 பேர், மேல்முறையீட்டுக்குப் பிறகு மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டதாகவும் திருவாட்டி ஃபுஸியா கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த 11 பேர், பிகேஆர் கட்சிக்குத் தாங்கள் கடமைப்பட்டுள்ளதை நிரூபிக்க ஆதரவுக் கடிதங்களையும் தங்களின் அடித்தளப் பணிகள் சம்பந்தப்பட்ட பதிவுகளையும் ஆதாரங்களாகச் சமர்ப்பித்தனர்; அவற்றைக் கருத்தில்கொண்டு அவர்கள் கட்சியில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டதாக திருவாட்டி ஃபுஸியா குறிப்பிட்டார்.

கட்சிப் பிரிவுகளுக்கான தேர்தல் முடிந்த பிறகு மேலும் மூன்று தலைவர்கள் நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒருநேரத்தில் இரு கட்சிகளில் உறுப்பினர்களாக இருப்பவர்களை அடையாளம் காண்பது எளிதாக இருக்காது என்பதை திருவாட்டி ஃபுஸியா வலியுறுத்தினார். குறிப்பாக போதுமான ஆவணங்கள் இல்லாதது, சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் நிகழ்ந்த காலகட்டங்கள் தெளிவாக இல்லாதது அதற்குக் காரணங்களாக இருக்கும் என்றும் அவர் விவரித்தார்.

அதேவேளை, முன்பு மற்ற கட்சிகளில் உறுப்பினர்களாக இருந்த எல்லோரையும் தாங்கள் தண்டிப்பதில்லை என்பதையும் அவர் சுட்டினார்.

“முன்பு அம்னோ கட்சியில் இருந்து பின்னர் பிகேஆரில் சேர்ந்த உறுப்பினர்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுப்பதில்லை,” என்று திருவாட்டி ஃபுஸியா ஃபிரீ மலேசியா டுடேயிடம் உதாரணமாகக் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்