பல பயணிகளைக் காணாத நிலையில் மூழ்கிய கப்பலை மீட்க இந்தோனீசியா நடவடிக்கை

பல பயணிகளைக் காணாத நிலையில் மூழ்கிய கப்பலை மீட்க இந்தோனீசியா நடவடிக்கை

படம்: ஏஎஃப்பி

18 Sep 2026 - 5:51 pm

2 mins read

பெஞ்சர்மசின்: இந்தோனீசியாவில் கடந்த வாரம் மூழ்கியக் கப்பலில் இருந்த பயணிகளை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன.

அந்த விபத்தில் இன்னும் 129 பயணிகளைக் காணவில்லை. அவர்களைத் தேட எட்டுக் கப்பல்கள், இரண்டு ஹெலிகாப்டர்கள் ஆகியன அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) பணியமர்த்தப்பட்டன.

அறுவர் உயிரிழந்த நிலையில் 108 பயணிகள் இதுவரை காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்த நிலை செப்டம்பர் 13ஆம் தேதி முதல் மாற்றம் அடையவில்லை. இதற்கிடையே ஜாவா கடலில் மூழ்கியக் கப்பலை நீரில் இருந்து வெளியில் எடுக்க அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.

‘விர்கோ டிரான்ஸ்போர்ட்’ என்ற 4,277 டன் எடைகொண்ட அக்கப்பல் 243 பயணிகளுடன் அதன் 20 மணிநேரப் பயணத்தை கிழக்கு ஜாவாவில் உள்ள சுரபாயா நகரிலிருந்து தென் கலிமந்தானின் பெஞ்சர்மசின் நோக்கித் தொடங்கியது.

அது கடுமையான வானிலை காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 13) தென் கலிமந்தான் அருகில் உள்ள கடல் பகுதியில் மூழ்கியது.

ஐந்து நாள்களாகியும் மீட்புப் பணியாளர்களால் எஞ்சிய உயிர்பிழைத்தோரையோ, அல்லது சடலங்களையோ கண்டுபிடிக்க முடியவில்லை. அந்தக் கடல் பகுதியின் பேரலைகளும் கடுமையான காற்றும் அவர்களின் பணிகளுக்குத் பெருந்தடைகளாக அமைந்துவருகின்றன.

எனவேதான் மூழ்கிய கப்பலை மீட்பது, மேலும் உடல்களை அதனுள் கண்டெடுக்க உதவும் என அதிகாரிகள் நம்புகின்றனர். கப்பல் ஓரளவு நீரில் சாய்ந்த நிலையில் சில நாள்கள் தத்தளித்தது. பிறகு தற்போது முழுவதுமாக ஆழ்கடலில் மூழ்கி கடலடியை அடைந்துவிட்டது என அதிகாரிகள் வியாழக்கிழமை கூறினர்.

ஆழ்கடலின் நீரோட்டம், உயர் அழுத்தம், கவிழ்ந்த நிலையில் உள்ள கப்பலின் வடிவமைப்பு ஆகியன முக்குளிப்பாளர்கள் அதனை நெருங்குவதை பல முறை தடுத்து வருவதாக அதிகாரிகள் விவரித்தனர். அது அவர்களின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது என்பதால் அவர்கள் மிகக் கவனமாக செயல்படவேண்டியுள்ளது என்றனர் அதிகாரிகள்.

குறிப்புச் சொற்கள்