புத்ராஜெயா: மலேசியாவில் சட்டத்திற்கு உட்பட்டே வழிபாட்டுத் தலங்கள் கட்டப்பட வேண்டும் என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியிருக்கிறார்.
அனைத்துச் சமய நடவடிக்கைகளும் நாட்டில் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது கட்டாயம் என்றும் அவர் சொன்னார்.
அரசாங்கம் எந்தவொரு சமய நடவடிக்கையையும் தடுத்ததோ கட்டுப்படுத்தியதோ இல்லை என்பதைத் திரு அன்வார் சுட்டினார்.
இருப்பினும் அத்தகைய நடவடிக்கைகள் மத்திய அரசமைப்புச் சட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றார் அவர்.
“போதனை செய்யலாம். எந்தக் கட்டுப்பாடும் இல்லை. ஆனால் விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
“நாங்கள் கேட்டுக்கொள்வதெல்லாம் அதைத்தான். இந்த விவகாரத்திற்கு முறையான தீர்வு காணப்படும் என்று நம்புகிறேன்,” என்று திரு அன்வார் கூறினார்.
உள்துறை அமைச்சு ஊழியர்களிடம் அவர் வியாழக்கிழமை (பிப்ரவரி 19) பேசினார். புனித நோன்பு மாதத்தில் ஊக்கமூட்டும் விதமாக இஹ்யா ரமலான் திட்டத்தை மலேசிய அரசாங்கம் அண்மையில் தொடங்கிவைத்தது.
உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில், உள்துறைத் துணையமைச்சர் ஷம்சுல் அனுவார் நசராஹ் முதலியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான விவகாரங்களைச் சட்டத்திற்கு வெளியே கையாளும் உரிமை எவருக்கும் இல்லை என்று மலேசியப் பிரதமர் இம்மாதம் (பிப்ரவரி) 12ஆம் தேதி கூறியிருந்தார்.
மலேசியாவில் முறையான அனுமதி இல்லாமல் கட்டப்படும் வழிபாட்டுத் தலங்கள் குறித்த சர்ச்சை நிலவும் வேளையில் பிரதமர் அன்வார் இப்ராகிமின் கருத்து வெளியாகியுள்ளது.

