ர‌ஷ்யாவில் ‘பிளேக்’; முழு ஆய்வை நடத்த முடியாது என்கிறது ‘டபிள்யுஎச்ஓ’

ர‌ஷ்யாவில் ‘பிளேக்’; முழு ஆய்வை நடத்த முடியாது என்கிறது ‘டபிள்யுஎச்ஓ’

அபாயங்கள் குறித்த ஆய்வைப் பற்றி உலகச் சுகாதார நிறுவனம் குறிப்பிட்டது
படம்: ஏஎஃப்பி

08 Oct 2026 - 7:07 pm

2 mins read

ஜெனிவா: ர‌ஷ்யாவில் ஆய்வுக்கூடம் ஒன்றில் பணியாளர் பிளேக் தொற்றுக்கு ஆளாகி மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதுகுறித்து ர‌ஷ்யாவிடமிருந்து தங்களுக்குத் தெளிவான தகவல்கள் வழங்கப்படவில்லை என்றும் அதன் காரணமாக அபாயங்கள் குறித்த முழு ஆய்வைத் தங்களால் தயார்செய்ய முடியாது என்றும் உலகச் சுகாதார நிறுவனம் (டபிள்யுஎச்ஓ) புதன்கிழமை (அக்டோபர் 7) தெரிவித்தது.

இர்குட்சில் சம்பவம்

இர்குட்ஸ்க் பிளேக் தடுப்பு ஆய்வுக் கழகத்தில் 28 வயது பெண் ஒருவர் மாண்டதைத் தொடர்ந்து கூடுதல் தகவல்களை வெளியிடுமாறு உலகச் சுகாதார நிறுவனம், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை மாஸ்கோவுக்குக் குரல் கொடுத்துள்ளன.

“மிக மோசமான நியூமோனியாவுக்கு ஆளானதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு அந்த ஆய்வுக்கூடப் பணியாளர் உயிரிழந்தார். ஆய்வுக்கூடத்தில் திட்டமிடாமல் கிருமியுடன் தொடர்பு ஏற்பட்டதால் அவர் நியூமோனிக் பிளேக் தொற்றுக்கு ஆளானதாக முதற்கட்ட ஊடகச் செய்திகள் தெரிவித்தன,” என்று உலகச் சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசுஸ் கூறினார்.

“இர்குட்ஸ்க் வட்டாரவாசி ஒருவர் அபாயகரமான கிருமித்தொற்றுக்கு ஆளானதாகத் தாங்கள் சந்தேகப்பட்டதைத் தொடர்ந்து ர‌ஷ்ய அரசாங்கம் அக்டோபர் 2ஆம் தேதி சந்திப்பு நடத்தியதை உலகச் சுகாதார நிறுவனம் அறிகிறது,” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் சொன்னார். இதுகுறித்து அனைத்துலக சுகாதார விதிமுறைகளின்படி (ஐஎச்ஆர்) அக்டோபர் 3ஆம் தேதி உலகச் சுகாதார நிறுவனம், மாஸ்கோவிடம் கூடுதல் தகவல்களைக் கேட்டதாக திரு டெட்ரோஸ் தெரிவித்தார்.

ர‌ஷ்யாவின் பதில்

இதற்குப் பதிலளித்த ர‌ஷ்யா, இர்குட்ஸ்க் வட்டாரத்தில் பிளேக் சம்பவங்கள் இடம்பெற்றதாகத் தகவல் இல்லை என்று தெரிவித்தது. கிட்டத்தட்ட 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் அது கூறியது.

மாண்ட பெண்ணிடம் நடத்தப்பட்ட சோதனைகள், அவருடன் தொடர்புகொண்டவர்கள் உள்ளிட்டவற்றின் தொடர்பில் உலகச் சுகாதார நிறுவனம், ர‌ஷ்யாவிடம் கூடுதல் தகவல்களைக் கேட்டுள்ளதாக திரு டெட்ரோஸ் தெரிவித்தார்.

“இந்நிகழ்வைப் பற்றிய முழு விவரங்கள் இன்னும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அதனால், எங்களால் அபாயங்கள் குறித்த முழு ஆய்வை நடத்த முடியாது,” என்றார் அவர்.

“நேர்மாறாக வெளிவரும் தகவல்களைச் சரிபார்க்கவும் பொதுமக்களுக்கு இருக்கக்கூடிய சுகாதார அபாயங்களைச் சரிவர அடையாளம் காணவும் அனைத்துலக விதிமுறைகளின்படி அந்தந்த நேரத்தில் முழுமையான, வெளிப்படையான தகவல்கள் பகிரப்படுவது முக்கியமாகும்,” என்றும் திரு டெட்ரோஸ் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்
உலகம்ர‌ஷ்யாகிருமித்தொற்றுசுகாதாரம்அமெரிக்கா