சிட்னி: போக்குவரத்துக் கண்காணிப்புக் கோபுரங்களில் பணியாற்றும் கட்டுப்பாட்டாளர்களின் பற்றாக்குறை தொடர்வதால் இரவு நேரங்களில் சிட்னி விமான நிலையத்தை மூடிவைக்கும் திட்டத்துக்கு முக்கிய விமான நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
பாதுகாப்புக் குறித்த கவலையை அண்மைய சம்பவங்கள் ஏற்படுத்தியிருப்பதும் பல விமானப் பயணங்கள் பாதிக்கப்படுவதும் அதற்கான காரணங்களாக கூறப்படுகின்றன.
“இது நாம் நிச்சயம் ஆராய வேண்டிய ஒரு வாய்ப்பைப் போல் தெரிகிறது,” என்று குவான்டாஸ் ஏர்வேஸ், அதன் குறைந்தக் கட்டண நிறுவனமான ஜெட்ஸ்டார், வெர்ஜின் ஆஸ்திரேலியா ஹோல்டிங்ஸ் ஆகியவற்றைப் பிரதிநிதிக்கும் ‘ஏர்லைன்ஸ் ஃபார் ஆஸ்திரேலியா & நியூசிலாந்து’ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஸ்டீபன் பெக்கெட் கூறினார்.
முன்வைக்கப்பட்டுள்ள திட்டத்தில் நடைமுறைக்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக அவர் கூறினார். ஜூலை மாதத்திலிருந்து இதுவரை ஆறு ஆபத்தான சம்பவங்கள் சிட்னி விமான நிலையத்தில் நிகழ்ந்துள்ளன.
போதிய கட்டுப்பாட்டளார்கள் பணியில் இல்லாததால் ஓடுபாதையில் பல தவறுகள் நடந்து விமானங்களுக்கு இடையே விபத்துகள் கடைசி நேரத்தில் நல்ல வேளையாக தவிர்க்கப்பட்டன.
ஜூலை மாதம் மட்டும் 60,000 பயணிகள் விமானச் சேவைகள் தாமதமானதால் அவதிக்குள்ளாயினர் என்று குவாண்டாஸ் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி வெனிஸா ஹட்சன் கவலை தெரிவித்தார்.
சேவைத் தடைகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவால் ஆகஸ்ட் மாதம் நடந்த சந்திப்புக் கூட்டத்தில் இரவு நேரங்களில் கட்டுப்பாட்டுக் கோபுரத்தை மூடும் திட்டம் விவாதிக்கப்பட்டது.
ஏற்கெனவே, சிட்னி விமான நிலையத்தில் இரவு 11 மணி முதல் காலை ஆறு மணிவரை போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கோபுரம் மூடப்பட்டுதான் இருக்கிறது. அரசாங்க அனுமதிபெற்ற சேவைகளைத் தவிர்த்து அந்த நேரங்களில் வர்த்தக விமானங்கள் பயணம் செய்ய அனுமதி இல்லை.
இருப்பினும், அவ்வாறு அனுமதியுடன் பயணம் செய்யும் விமானங்கள் தாமாகவே பாதுகாப்பு அம்சங்களை புறப்படும்போதும் தரையிறங்கும்போதும் உறுதி செய்துகொள்ளவேண்டியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய விமானப் போக்குவரத்து நடுவமாக விளங்கும் சிட்னியில் தற்காலிகமாகக்கூட செயல்பாட்டுக் கோபுரம் இல்லாமல் இயங்கும் திட்டம், தொழிலாளர் பற்றாக்குறையின் அவசர நிலையைப் பிரதிபலிக்கிறது.
