ஹனோய்: வியட்னாமின் வர்த்தக நடுவமான ஹோ சி மின் நகரத்தில் பெட்ரோலிலும் டீசலிலும் இயங்கும் வாகனங்களைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்மொழிந்துள்ளனர்.
கரிம வெளியேற்றம் குறைவாக இருக்கும் பகுதியாக அந்நகரின் மையப் பகுதியை உருவெடுக்கச் செய்யும் நோக்கில் அடுத்த ஆண்டு நடுப்பகுதியிலிருந்து அந்தக் கட்டுப்பாட்டை அமல்படுத்த அதிகாரிகள் பரிந்துரைத்ததாக ‘தான் நியென்’ நாளிதழ் தெரிவித்தது.
புதிய பரிந்துரையின்கீழ், குறைவான கரிம வெளியேற்றம் உள்ள நகரத்துக்கான முன்னோடித் திட்டம், நகர மையத்திலும் புதிய து தியெம் வட்டாரத்திலும் 2027 ஜூலையிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும். அந்தப் பகுதிகள் கிட்டத்தட்ட 930 ஹெக்டர் பரப்பளவு உடையது.
ஈராண்டு சோதனைக்குப் பிறகு நகரின் ரிங் ரோட் 2விற்கு 2029ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து திட்டம் விரிவுபடுத்தப்படும். குறிப்பிட்ட சில நேரங்களில் அங்குக் கனரக வாகனங்களும் பேருந்துகளும் ஓட்டுவதற்கு ஏற்கெனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதற்குமுன், குறைந்த கரிம வெளியேற்ற மண்டலத்துக்கான திட்டம் இவ்வாண்டின் தொடக்கத்தில் அமலுக்கு வரவிருந்தது.
ஆனால், பசுமைப் போக்குவரத்து உள்கட்டமைப்பை அறிமுகம் செய்வதற்கு எற்ப சில அம்சங்களை மறுஆய்வுசெய்யப்பட்ட திட்டம் மாற்றியமைக்கிறது.
அத்துடன், குடியிருப்பாளர்களும் வணிக நிறுவனங்களும் தங்கள் வாகனங்களை மாற்றிக்கொள்ள கூடுதல் நேரம் வழங்க திட்டம் தள்ளிவைக்கப்பட்டது.
மோட்டார்சைக்கிள் - டாக்சி ஓட்டுநர்களுக்கும் விநியோக ஓட்டுநர்களுக்கும் திட்டம் முதலில் அமல்படுத்தப்படும். பின்னர் பிற டாக்சிகள் போன்ற பிற வாகனங்களுக்கு அது விரிவுபடுத்தப்படும்.
முன்மொழியப்பட்ட திட்டம் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்படும்வரை தொடர்ந்து மறுஆய்வு செய்யப்படும்.
ஜூன் மாதத்தில் ஹனோய் வெளியிட்ட அறிவிப்பின்படி குறைந்த கரிம வெளியேற்ற மண்டலங்களிலிலிருந்து பெட்ரோலில் இயங்கும் வாடகை மோட்டார்சைக்கிள்களைக் கட்டங்கட்டமாக நீக்கத் திட்டமிட்டுள்ளது.
ஓட்டுநர்கள் அவர்களாகவே முன்வந்து அதைப் பின்பற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரி 2027லிருந்து அத்தகைய வாகனங்கள் முழுமையாகத் தடை செய்யப்படும்.


