மலேசியப் பள்ளிகளில் ஆசியான் மொழிகளைக் கற்பிக்க திட்டம்

2 mins read
80e02ee8-5ce6-4606-916e-9b59c4289242
மலேசியத் தேசியப் பள்ளிகளில் தற்போது அரபு, மாண்டரின், தமிழ், இபான், கடாஸன்டுஸன், செமாய், பஞ்சாபி ஆகிய ஏழு தெரிவு மொழிப் பாடங்கள் வழங்கப்படுகின்றன. - படம்: நியூநரேடிஃப்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் உள்ள தேசியப் பள்ளிகளில் மாண்டரின், தமிழ் ஆகிய மொழிகளை விரிவுபடுத்துவதுடன் ஆசியான் மொழிகளையும் சேர்த்துக்கொள்வது பற்றி மலேசியக் கல்வியமைச்சு ஆலோசிக்கிறது.

மூன்று அம்சங்களின்கீழ் கூடுதல் மொழிகளைக் கற்பதற்கான வழிமுறைகள் ஆராயப்படுகின்றன.

ஒன்று மாண்டரின், தமிழ் ஆகிய மொழிகளை தேசியத் தொடக்கப்பள்ளிகளில் விரிவுபடுத்துவது. அதே மொழிகளைத் தேசிய உயர்நிலைப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்துவது, ஆசியான் மொழிகள் உள்ளிட்ட கூடுதல் மொழிகளை விரிவுபடுத்துவது.

மூன்று கட்டத் திட்டத்துக்கான பணிகள் நடைபெறுவதாகக் கல்வியமைச்சு சொன்னது.

திட்டம் குறித்து விரிவாகப் பேசிய அமைச்சு, குறுகிய காலத்தில் மாணவர்களுக்கான தேவை, குறிப்பாக எல்லையில் உள்ள பள்ளிகளிலும் தெரிவுசெய்யப்பட்ட பள்ளிகளிலும் எந்தளவு உள்ளது என்பதைக் கண்டறிவதற்கான ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றது.

இவ்வாண்டு ஏப்ரல் மாதம் மலேசியா மாண்டரின், தமிழ் ஆகிய மொழிகளைத் தவிர தாய்லாந்து மொழி, வியட்னாம் மொழி ஆகியவற்றையும் பள்ளிகளில் தெரிவுப் பாடங்களில் இணைக்க திட்டமிடுவதாகக் கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.

தேவைக்கு ஏற்பவும் ஆசிரியர்கள், வளங்கள் ஆகியவற்றைப் பொருத்தும் எத்தனை மொழிகள் தெரிவுப்பாடங்களில் வழங்கப்படலாம் என்பது பற்றி கல்வியமைச்சு முடிவெடுக்கும் என்றார் அமைச்சர் ஃபட்லினா.

கல்விப் பாடத்திட்ட, கொள்கை ஆய்வுப் பிரிவின் பரிந்துரைகளுக்கு ஏற்ப ஆசியான் மொழிகள் பள்ளிகளில் வழங்கப்படும் என்று அமைச்சு சொன்னது.

மலேசியப் பள்ளிகளில் தற்போது ஏழு மொழி சார்ந்த தெரிவுப்பாடங்கள் வழங்கப்படுகின்றன. அவை, அரபு, மாண்டரின், தமிழ், இபான், கடாஸன்டுஸன், செமாய், பஞ்சாபி ஆகியவை ஆகும்.

பல மொழிகளை அறிந்திருப்பது வலுவையும் பொறுப்பையும் தரும் என்று மலேசியக் கல்வியமைச்சு கருதுகிறது.

குறிப்புச் சொற்கள்