கட்டடம் மீது மோதிய விமானம், இருவர் பலி, 18 பேர் காயம்

1 mins read
6c0abaa5-b049-4d75-b550-3a8ad7d2ea45
சம்பவம் காரணமாக 18 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் கூறினர் - படம்: இணையம்

கலிஃபோர்னியா: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தின் தென்பகுதியில், விமானம் ஒன்று வர்த்தகக் கட்டடம் மீது மோதியது.

இதில் குறைந்தது இருவர் மாண்டனர்.

இச்சம்பவத்தில் 18 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் கூறினர்.

சம்பவம் டிசம்பர் 2ஆம் தேதியன்று நிகழ்ந்தது.

அமெரிக்க நேரப்படி பிற்பகல் 2 மணி அளவில் ஃபுல்லர்டன் நகராட்சி விமான நிலையத்துக்கு அருகில் உள்ள கட்டடம் மீது விமானம் மோதியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இக்கட்டடம் லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலிருந்து ஏறத்தாழ 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

அக்கட்டடம் மரக்கலன்கள் தயாரிக்கும் நிறுவனத்துக்குச் சொந்தமானது என்று அறியப்படுகிறது.

கட்டடத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சிலருக்கு மோசமான காயங்கள் ஏற்பட்டதாகவும் சிலருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.

பத்து பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

எட்டு பேருக்குச் சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.

கட்டடம் மீது மோதிய விமானத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் எனத் தெரியவில்லை.

மாண்ட இருவர் விமானத்தில் இருந்தவர்களா அல்லது கட்டடத்தில் இருந்தவர்களா என்ற விவரமும் இன்னும் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

விமானம் கட்டடம் மீது மோதியது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

குறிப்புச் சொற்கள்