ரஷ்யாவில் விழுந்து நொறுங்கிய விமானம்

2 mins read
பயணம் செய்த 50 பேரும் மாண்டதாக அஞ்சப்படுகிறது
490b509f-40da-47ac-9d68-5037f9ba54b2
விபத்துக்குள்ளான விமானம் அங்காரா ஏர்லைன்சுக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது. - சித்திரிப்பு: அங்காரா.ஏரோ/ஃபேஸ்புக்

மாஸ்கோ: ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில், 50 பேரை ஏற்றிச்சென்ற ‘அன்டோனோவ் ஏஎன்-24’ வகை விமானம் ஒன்று வியாழக்கிழமை (ஜூலை 24) விழுந்து நொறுங்கியதாகக் கூறப்படுகிறது.

அதில் பயணம் செய்த அனைவரும் மாண்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுவதாக ரஷ்ய அவசரநிலைச் சேவைப் பிரிவின் அதிகாரிகள் கூறினர்.

அந்த விமானம் சோவியத் காலகட்டத்தைச் சேர்ந்தது என்றும் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் பழைமையானது என்றும் தெரிகிறது.

கீழே விழுந்த விமானத்தில் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை ஹெலிகாப்டர் ஒன்றில் சென்றவர்கள் கண்டதாகவும் மீட்புக் குழுவினர் அந்த இடத்துக்கு விரைந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டுள்ள காணொளியில் அந்த விமானம் அடர்ந்த காட்டுப் பகுதியில் விழுந்து நொறுங்கியதைக் காண முடிகிறது. இருப்பினும் அந்தக் காணொளியின் நம்பகத்தன்மை இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.

விபத்துக்குள்ளான விமானம் 1976ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என்றும் சைபீரியாவின் அங்காரா ஏர்லைன்ஸ் நிறுவனம் அதை இயக்கியதாகவும் கூறப்பட்டது.

அந்த விமானம் சீன எல்லையில் அமைந்துள்ள டிண்டா எனும் நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்ததாகவும் அந்த நகரை நெருங்கும் வேளையில் ‘ராடார்’ கண்காணிப்புத் திரையிலிருந்து மறைந்துவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் ஐந்து குழந்தைகள் உட்பட 43 பேர் பயணம் செய்தனர். மேலும், விமானச் சிப்பந்திகள் ஆறு பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்று அதிகாரிகள் கூறினர்.

டிண்டா நகரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு மலையில் அந்த விமானத்தின் சிதைவுகளைத் தேடல் மீட்புக் குழுவினர் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. விபத்து குறித்த விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்