நியூஜெர்சி: ‘பெஃட்எக்ஸ்’ நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று நியூஜெர்சியில் உள்ள நியூயார்க் லிபர்டி அனைத்துலக விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
மார்ச் 1ஆம் தேதி அதிகாலை விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானத்தின் ஓர் இயந்திரத்தில் பறவை ஒன்று மோதியது. அதனால் அதில் தீ ஏற்பட்டது. அச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் விமானத்தில் மூன்று பேர் இருந்ததாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து பெஃட்எக்ஸ் நிறுவனமும் அறிக்கை வெளியிட்டது.
“நியூவார்கில் இருந்து இண்டியானபோலிசுக்கு விமானம் செல்லும்போது எதிர்பாராவிதமாக இச்சம்பவம் நிகழ்ந்தது. விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. விமானம் ஆய்வுசெய்யப்படுகிறது,” என்று அது தெரிவித்தது.
விமானத்தில் இருந்த சரக்குகள் குறித்து பெஃட்எக்ஸ் தகவல் வெளியிடவில்லை.
இந்நிலையில், சம்பவம் குறித்த காணொளி ஒன்று சமூக ஊடகத்தில் பதிவிடப்பட்டது. அதில் விமானத்தின் அடிப்பகுதியில் தீ மூண்டு இருப்பதைப் பார்க்க முடிந்தது.
அண்மைக் காலமாக அமெரிக்காவில் விமானம் தொடர்பான இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஜனவரி மாதம் வாஷிங்டனில் ராணுவ ஹெலிகாப்டரும் பயணிகள் விமானமும் மோதிக்கொண்டதில் 67 பேர் மாண்டனர்.