நெகிழிப் பை விலையேற்றம்: ஜோகூர் பாரு சில்லறை வணிகர்கள் கவலை

நெகிழிப் பை விலையேற்றம்: ஜோகூர் பாரு சில்லறை வணிகர்கள் கவலை

2 mins read
bd43b27b-c439-46bd-833c-0cb8f3bbace4
நெகிழிப்பை பயன்பாட்டை வணிகர்கள் குறைக்கத் தொடங்கினால் வாடிக்கையாளர்களே பையை எடுத்துவர வேண்டியிருக்கும் என்கிறார் காய்கறி வணிகர் புவா மிங் ஹுய் (இடது). - படம்: தி ஸ்டார்

ஜோகூர் பாரு: நெகிழிப்பைகளின் விலையேற்றம் மலேசியாவின் ஜோகூர் பாரு நகரச் சில்லறை வணிகர்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் பதற்றநிலை காரணமாக பெட்ரோலியப் பொருள்களின் விலைகள் கூடிவிட்டன.

பெட்ரோலியத்திலிருந்து கிடைக்கும் ‘நாப்தா’விலிருந்து நெகிழிப்பைகளும் நெகிழிப்புட்டிகளும் தயாரிக்கப்படுகின்றன.

நெகிழிப்பைக்குத் தட்டுப்பாடு இல்லையெனினும் அதன் விலையேற்றத்தால் லாபம் குறைந்துள்ளதாகக் காய்கறி வணிகர் புவா மிங் ஹுய் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு மார்ச்சில் ஒரு கிலோ நெகிழிப்பைச் சுருளின் விலை 9 ரிங்கிட்டாக (S$2.90) இருந்த நிலையில், இப்போது அது 11.70 ரிங்கிட்டாகக் கூடிவிட்டது என்று அவர் கூறினார்.

அதுபோல, கிலோ 3.80 ரிங்கிட்டாக இருந்த சிறிய நெகிழிப்பைகளின் விலை கிலோ 4.20 ரிங்கிட்டாக உயர்ந்துவிட்டது.

இருப்பினும், அதன் விலையேற்றத்தை வாடிக்கையாளர்கள் தலையில் சுமத்த விரும்பவில்லை என்றார் திரு புவா.

வெவ்வேறு வகை நெகிழிப்பைகளுக்குக் கூடுதலாகச் செலவிடுவதைத் தவிர தம் முதலாளிக்கு வேறு வழியில்லை என்றார் சில்லறை விற்பனைக் கடை ஒன்றில் உதவியாளராகப் பணிபுரியும் திருவாட்டி மரியா.

“கடந்த மார்ச் மாதத்தில் 20 கிலோ நெகிழிப்பைகளின் விலை 125 ரிங்கிட்டாக இருந்தது. அதற்குத் தற்போது 160 ரிங்கிட் கொடுக்க வேண்டியுள்ளது,” என்றார் அவர்.

பேரங்காடிகளில் நெகிழிப்பை வழங்கப்படாத நிலையில், அந்நடைமுறையைச் சிறு வணிகர்களும் விரைவில் கடைப்பிடிக்க நேரிடும் என்றும் திருவாட்டி மரியா கூறினார்.

அத்தகைய சூழலில், பொருள் வாங்குவோரே பைகளை எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும் அல்லது நெகிழிப்பைக்குக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

இதனிடையே, மத்திய கிழக்கில் போர் நீடித்தால் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்று மலேசிய நெகிழி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் மைக் டான் தெரிவித்துள்ளார்.

அதன் தொடர் விளைவுகள் இப்போதே வெளிப்படத் தொடங்கியுள்ளன. நெகிழிப்பை பற்றாக்குறையின் நேரடி பாதிப்பைப் பயனீட்டாளர்கள் விரைவில் நேரடியாக உணரலாம் என்று தொழில்துறையினர் எச்சரிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்