கோலாலம்பூர்: மலேசியாவின் மலாக்கா மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) மாலை நடைபெற்ற காற்பந்து ஆட்டத்தின்போது மின்னல் தாக்கியதில் 28 வயது விளையாட்டாளர் ஒருவர் உயிரிழந்தார்; நடுவர் காயமடைந்தார்.
அங்குள்ள லெண்டு இளைய நண்பர்கள் வளாகத் திடலில், மூத்தோர் அணிகள் இரண்டுக்கு இடையே நட்புமுறை ஆட்டம் நடைபெற்றது.
ஆட்டம் தொடங்கி பத்து நிமிடங்களிலேயே லேசான மழை பெய்யத் தொடங்கிய நிலையில், திடீரென பலத்த இடியோசை கேட்டது. அதில், ‘ரெம்பாவ் இந்தியன் வெட்டரன்’ அணி விளையாட்டாளரான ஆர்.தனேஷ் மின்னல் தாக்கி, அவ்விடத்திலேயே சுருண்டு விழுந்தார். அவரது உடலில் தீக்காயங்கள் இருந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
இந்நிகழ்வில் பாதிக்கப்பட்ட இன்னொருவர் நல்ல நிலையில் இருக்கிறார் என்றும் அவர் மருத்துவ சிகிச்சைக்கு மறுத்துவிட்டார் என்றும் அலோர் காஜா காவல்துறைத் தலைவர் அகமது அபு பக்கர் தெரிவித்தார்.
இந்தத் துயர நிகழ்வை அடுத்து, காற்பந்துப் போட்டிகளின்போது பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடுமையாக்க மலேசியக் காற்பந்துச் சங்கம் உத்தரவிட்டுள்ளது.
எத்தககைய போட்டியும் மனித உயிர்களைவிட முதன்மையானதன்று என அச்சங்கத்தின் தலைமைச் செயலாளர் நூர் அஸ்மான் ரஹ்மான் தெரிவித்துள்ளார். மோசமான வானிலையின்போது ஆட்டங்களைத் தள்ளிவைப்பது அல்லது ரத்து செய்வதுதான் பொறுப்பான முடிவாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
தொழில்முறை லீக் போட்டிகளைப்போல, உள்நாட்டுப் போட்டிகளின்போதும் மின்னல் முன்னறிவிப்புத் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்த ஏற்பாட்டாளர்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக, 2016 ஏப்ரல் மாதத்தில் மலாக்கா யுனைடெட் அணியின் 18 வயது கோல்காப்பாளர் ஸ்டெஃபான் பெட்ரோவ்ஸ்கி பயிற்சியின்போது மின்னல் தாக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தனேஷ் மரணம் குறித்து முழுமையான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மலாக்கா காற்பந்துச் சங்கத்திற்கு மலேசியக் காற்பந்துச் சங்கம் உத்தரவிட்டுள்ளது.

