பெட்டாலிங் ஜெயா: மலேசிய அரசாங்கத்தைக் கவிழ்த்து, தேசிய நிலைத்தன்மையைக் கீழறுக்கச் சதித்திட்டம் தீட்டப்படுவதாகச் சந்தேகிக்கப்படுவதன் தொடர்பில், மலேசியக் காவல்துறை உயர்நிலை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
சதித்திட்டத்தைச் செயல்படுத்த, உள்ளூரைச் சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் அனைத்துலக ஊடக அமைப்பு ஒன்றுடன் ஒன்றிணைந்து செயல்படுவதாக வெளியான தகவல்களின் தொடர்பில், விசாரணை நடத்தப்படுவதாகக் காவல்துறைத் தலைமை அதிகாரி முகமது காலிட் இஸ்மாயில் கூறினார்.
இருப்பினும், அவர் அந்த நபரின் பெயரையும் அமைப்பின் பெயரையும் வெளியிடவில்லை.
மத்தியக் காவல்துறையின் ரகசியக் குற்றவியல் விசாரணைப் பிரிவு விசாரணையைக் கையாள்வதாக அவர் சொன்னார்.
நாடாளுமன்ற ஜனநாயகத்துக்குத் தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் தொடர்பில், குற்றவியல் சட்டத் தொகுப்பின் 124பி பிரிவின்கீழ் அந்த வழக்கு விசாரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
“விசாரணை தொடர்கிறது. காவல்துறை விசாரணை முடிவுறும்வரை, வழக்குக் குறித்து ஊகிக்கவேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது,” என்று திரு முகமது காலிட் தெரிவித்தார்.

