வாஷிங்டன்: அமெரிக்காவின், சிகாகோ புறநகர்ப் பகுதியிலுள்ள இந்துக் கோயிலில் துப்பாக்கிச் சூடு நடத்தத் திட்டமிட்டதாக 19 வயது அலெக்சான்ட்ரோஸ் பாபோராகிசை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள், வெடிமருந்து, இன வெறியைத் தூண்டும் அடையாளங்கள் கொண்ட கவச உடைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ‘நான் ஏன் போராடினேன்’ என்ற தலைப்பிலான அவரது அறிக்கை ஒன்றையும் காவல்துறை கைப்பற்றியது.
அதில் இந்தியர்கள், தெற்காசியர்களுக்கு எதிரான வன்முறைக் கருத்துகள் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்பட்டது.
பாலடைனிலிருந்து தென்மேற்கே கிட்டத்தட்ட 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரோரா பகுதியிலுள்ள இந்துக் கோயிலைக் குறிவைத்து, அக்டோபர் 11ஆம் தேதி தாக்குதல் நடத்த அவர் திட்டமிட்டிருக்கலாம் என்று புலனாய்வுத் துறை கருதுகிறது.
எனினும், தாக்குதலுக்குத் திட்டமிடப்பட்ட இடம் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. அது குறித்துத் தொடர்ந்து விசாரணை நடைபெறுவதாகக் காவல்துறை கூறியது. விசாரணையில் அமெரிக்க உளவுத்துறை அமைப்பு உதவிவருவதாக அது குறிப்பிட்டது.
அவர்மீது பயங்கரவாத அச்சுறுத்தல் விடுத்தல், சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் அக்டோபர் 30ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
“வழிபாட்டுத் தலத்தைக் குறிவைத்து நடத்தப்படவிருந்த தாக்குதலைச் சமயோசிதமாகத் தடுத்து நிறுத்திய காவல்துறையினரின் விரைவான நடவடிக்கையைப் பாராட்டுகிறோம்,” என்று சிகாகோவில் உள்ள இந்தியத் தூதரகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
புலம்பெயர்ந்தோருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்கள், கொள்கைகள், வெள்ளையின ஆதிக்கச் சித்தாந்தங்களின் வளர்ச்சி காரணமாக, அமெரிக்காவில் அண்மைய ஆண்டுகளில் தெற்காசியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு அதிகரித்துள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
