கோலாலம்பூர்: மலேசியத் துணைப் பிரதமர் ஸாஹித் ஹமிடிக்கு எதிரான 47 ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை விடுவிக்க நீதிமன்றம் முடிவெடுத்ததைத் தொடர்ந்து, இவ்வார இறுதியில் ஜோகூரில் நடைபெறவிருக்கும் இரு இடைத்தேர்தல்களின் முடிவுகளும் பாதிப்படையலாம் என்று கூறப்படுகிறது.
சிம்பாங் ஜெராம் மாநிலத் தொகுதியிலும், பூலாய் நாடாளுமன்றத் தொகுதியிலும் பிரதமர் அன்வார் இப்ராகிமின் பக்கத்தான் ஹரப்பான் – தேசிய முன்னணி கூட்டணி போட்டியிடுகிறது.
மலேசியத் தேர்தல் முறைப்படி, நாடாளுமன்ற உறுப்பினர் மாநிலத் தொகுதியையும் பிரதிநிதிக்கலாம். சிம்பாங் ஜெராம், பூலாய் ஆகிய இரு தொகுதிகளையும் பிரதிநிதித்த சலாஹுதின் அயுப் ஜூலை மாதம் காலமானதால், இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
மலாய் மக்கள் பெரும்பான்மை வகிக்கும் சிம்பாங் ஜெராமில் எதிர்க்கட்சி கூட்டணியான பெரிக்கத்தானிடன் ஆளுங்கட்சிக் கூட்டணி தோல்வியடையும் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்தியர்களும் சீனர்களும் அதிகமாக வாழும் பூலாயை ஆளும் கூட்டணிக் கட்சி தக்கவைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இடைத்தேர்தல் முடிவுகள் சனிக்கிழமை இரவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாக்டர் ஸாஹித் ஹமிடி விடுவிக்கப்பட்டது குறித்து பக்கத்தான் ஹரப்பான் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பூலாய் தொகுதியை ஆளும் கூட்டணிக் கட்சி இழந்தால், திரு அன்வாருக்கு நாடாளுமன்ற மக்களவையில் மூன்றில் இரு பங்குப் பெரும்பான்மை இருக்காது.