அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கவேண்டும்: பிரதமர் அன்வார்

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கவேண்டும்: பிரதமர் அன்வார்

1 mins read
213cfe52-b518-4302-92c3-79645d22a8b4
பிரதமர் அன்வார் இப்ராகிம் உலக தீயணைப்பு, மீட்பு தினத்தை உலு கிந்தா தம்புனில் தொடங்கிவைத்தார். - படம்: தி ஸ்டார்

ஈப்போ: அரசாங்க ஊழியர்களுக்கு 13 விழுக்காட்டுச் சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான அரசாங்கத்தின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பிய சில தரப்பினரை மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் குறைகூறியுள்ளார்.

அத்தகைய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படக்கூடாது என்றார் அவர். தீயணைப்பு, மீட்புத் துறையினர் போன்ற அரசாங்க அதிகாரிகளின் பங்களிப்பையும், தியாகத்தையும் அங்கீகரிக்கும் வகையில் அந்த அதிகரிப்பு வழங்கப்படுவதே அதற்குக் காரணம் என்று திரு அன்வார் கூறினார்.

ராணுவம், காவல்துறை, தீயணைப்புச் சேவைகள் போன்ற அமைப்புகளின் அர்ப்பணிப்பால் நாட்டில் தற்போது அமைதியும் பாதுகாப்பும் இருப்பதாக அவர் சொன்னார்.

மே 4ஆம் தேதி தம்புனில் ‘உலகத் தீயணைப்பாளர்கள் தினம் 2024’ நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து அவர் பேசினார்.

“தற்போதைய பொருளியல் சூழலில் அரசாங்கம் ஏன் அரசாங்க ஊழியர்களின் படித்தொகைகள், சம்பளங்கள், ஊதியங்களை அதிகரிக்கிறது என்று அவர்கள் சில நேரம் கேட்பதுண்டு.

“சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சேவையாலும் தியாகத்தாலும் இந்த நாடு தீச்சம்பவங்களிலிருந்தும் நிலச்சரிவுகளிலிருந்தும் பாதுகாப்பாக இருக்கிறது என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். அதனால்தான் நாம் அங்கீகாரம் வழங்குகிறோம்,” என்று திரு அன்வார் கூறினார்.

நிகழ்ச்சியில் பேராக் முதலைமைச்சர் டாதுக் ஸ்ரீ சாராணி முகம்மது, வீடமைப்பு, உள்ளூர் அரசாங்க அமைச்சர் ஙா கோர் மிங், தீயணைப்பு, மீட்புத் துறையின் தலைமை இயக்குநர் டாதுக் நோர் ஹிஷாம் முகம்மது ஆகியோரும் கலந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்