பெலருஸ் எல்லைப் பகுதியில் வீரர்களைக் குவித்த போலந்து

பெலருஸ் எல்லைப் பகுதியில் வீரர்களைக் குவித்த போலந்து

1 mins read
a8b1be18-2394-4637-baca-aeb8d95137fb
போலந்து 1,000க்கும் அதிகமான ராணுவ வீரர்களை அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் குவிக்கத் தொடங்கியிருப்பதாக அந்நாட்டின் தற்காப்பு அமைச்சர் மாரியஸ் பிளாஸ்ஸாக் கூறியிருக்கிறார். - படம்: ராய்ட்டர்ஸ்

வார்சா: போலந்து 1,000க்கும் அதிகமான ராணுவ வீரர்களை பெலருஸ் எல்லைக்கு இடமாற்றத் தொடங்கியிருப்பதாகத் தற்காப்பு அமைச்சர் மாரியஸ் பிளாஸ்ஸாக் கூறியிருக்கிறார்.

பெலருசில் வேக்னர் படை இருப்பதால் அந்த எல்லைப் பகுதியில் பதற்றநிலை அதிகரிக்கக்கூடும் என்ற அக்கறை நிலவிவரும் வேளையில், அண்மைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வேக்னர் படை பெலரூசுக்கு இடம்பெயர ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் எடுத்த முடிவு அந்த வட்டாரத்தில் அதிக அளவில் நிலையின்மையை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

“நாட்டின் எல்லைப் பகுதிக்கு அருகில் நிலைத்தன்மையைப் பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் பதிலடி கொடுப்பதற்கான எங்களின் பிரதிபலிப்பே இது,” என்று திரு பிளாஸ்ஸாக் கூறினார்.

ஜூலை 2ஆம் தேதி பெலருசுடனான அதன் எல்லைப் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்த 500 காவல்துறை அதிகாரிகளைப் பணியில் அமர்த்தப்போவதாக போலந்து கூறியது.

அண்மை வாரங்களில் எல்லைப் பகுதியைக் கடந்துசெல்லும் குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக போலந்து கூறியது.

மொரோக்கோ, இந்தியா, எத்தியோப்பியா குடிமக்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் சட்டவிரோதமாக எல்லைப் பகுதியைக் கடந்திருப்பதாக எல்லைப் பாதுகாவலர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்