அலாஸ்கா: அமெரிக்காவின் அலாஸ்காவில் பனிக்கரடி தாக்கியதில் இளம்பெண் ஒருவரும் அவரது ஒரு வயதுக் குழந்தையையும் மாண்டுபோயினர்.
இந்த சம்பவம் அலாஸ்காவின் மேற்குக் கடலோரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் என்னும் சிற்றூரில் கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்தது.
கிட்டத்தட்ட 150 பேரே வசிக்கும் அந்த ஊருக்குள் புகுந்த பனிக்கரடி, அங்கிருந்தவர்களைத் துரத்தத் தொடங்கியது.
அங்கிருந்த சமூகப் பள்ளிக்கு அருகே சம்மர் மியோமிக் என்ற 24 வயது இளம்பெண்ணையும் அவரது ஒரு வயது மகனையும் அந்தப் பனிக்கரடி கடுமையாகத் தாக்கியதாகக் காவல்துறை தெரிவித்தது.
அப்போது, உள்ளூர்வாசி ஒருவர் அந்தப் பனிக்கரடியைச் சுட்டுக்கொன்றார். ஆனாலும், கடுமையாகக் காயமடைந்ததால் தாயும் குழந்தையும் இறந்துவிட்டனர்.
அண்மைக்காலமாக, பனிக்கரடிகள் மனிதர்களைத் தாக்குவது அதிகமாகி வருகிறது.
புவி வெப்பமடைந்து, ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் பனிக்கட்டிகள் வேகமாக உருகி, பனிக்கரடிகளின் வாழிடங்கள் அழிந்து வருகின்றன. இதுவே, ஆர்க்டிக் பகுதியில் பனிக்கரடிகள் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் நுழைவது அதிகரித்து வருவதற்குக் காரணம் என்கிறார் லாப நோக்கமற்ற 'அனைத்துலக பனிக்கரடிப் பாதுகாப்பு' அமைப்பின் மூத்த இயக்குநர் ஜெஃப் யார்க்.
1870 முதல் 2014 வரை, உலகம் முழுதும் பனிக்கரடி தாக்கி மாண்டோர் எண்ணிக்கை வெறு 20தான் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

