லண்டன்: பிரிட்டன் தலைநகர் லண்டனில் தடைசெய்யப்பட்ட ‘பிஏ’ எனும் (PA) பாலஸ்தீன நடவடிக்கைக் குழுவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்த 474 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குழுவுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக 466 பேரும் அதிகாரிகளைத் தாக்கியதற்காக ஐவரும் பொது ஒழுங்கை மீறியதற்காக இருவரும் சமய ரீதியான குற்றத்தைப் புரிந்ததற்காக ஒருவரும் கைதுசெய்யப்பட்டனர் என்று நகரக் காவல்துறை கூறியது.
குழு தடை செய்யப்பட்ட பிறகு நடைபெற்ற மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் அது.
வெஸ்ட்மின்ஸ்டர் வட்டாரத்தின் நாடாளுமன்றச் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் செய்த பலர் கையால் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
“நான் இனப்படுகொலையை எதிர்க்கிறேன். பாலஸ்தீன நடவடிக்கைக் குழுவுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன்,” என்று அவர்கள் அதில் குறிப்பிட்டிருந்தனர்.
2000ஆம் ஆண்டு பயங்கரவாதச் சட்டத்தின்கீழ் அரசாங்கம் அந்தக் குழுவை இவ்வாண்டு ஜூலை மாதம் தடை செய்திருந்தது.
அதன்படி குழுவில் உறுப்பினராகச் சேர்வதோ ஆதரிப்பதோ குற்றமாகும். அத்துமீறுவோருக்கு 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடும்.
அதிகாரிகள் எவருக்கும் கடுமையான காயங்கள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
தடை நடப்புக்கு வந்த பிறகு சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்திற்கு முன்பு வரை, நாடு முழுதும் 200க்கும் மேற்பட்டோர் எதிர்ப்புத் தெரிவித்ததற்காகக் கைதுசெய்யப்பட்டனர்.

