ஜோகூர் பாரு: ஜோகூர் கடற்பாலத்தில் அடிதடியில் ஈடுபட்ட இருவரை விசாரணைக்கு உதவ ஜோகூர் காவல்துறை நேரில் அழைத்துள்ளது.
பரபரப்பான சாலை நடுவே அவ்விரு ஆடவர்களும் சண்டை போடுவதைக் காட்டும் காணொளி ஒன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) சமூக ஊடகத்தில் வலம் வந்ததைத் தொடர்ந்து, காவல்துறைக்கு அதுகுறித்து தகவல் கிடைத்ததாக ஜோகூர் பாரு தென்மாவட்டத் தலைவர் ரவுப் செலாமாட் தெரிவித்தார்.
சனிக்கிழமை அவர் வெளியிட்ட ஓர் அறிக்கையில், “இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணவும் தகராற்றுக்கான காரணத்தைக் கண்டறியவும் நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்,” என்றார்.
இதுகுறித்த தகவல் உடையோர் (+60)7 2182323 எனும் காவல்துறை எண்ணில் தொடர்புகொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
லாரி ஓட்டுநர் ஒருவர் எடுத்த அந்தக் காணொளி, கடற்பாலத்தில் இரு ஆடவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி வாய்த் தகராற்றில் ஈடுபட்டு, பின்னர் அது கைகலப்பாக மாறுவதைக் காட்டியது. சண்டையை நிறுத்த அங்கிருந்த மற்றவர்கள் தலையிடுவதும் அதில் தெரிந்தது.
அந்தக் காணொளி 3.3 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது.