அமெரிக்காவில் அவ்வப்போது கரடிகள் குடியிருப்பு வட்டாரங்களுக்குள் வருவது வழக்கம்.
சிலமுறை அவை வீடு மற்றும் கடைகளுக்குள் புகுந்து தமக்குப் பிடித்தமான உணவுகள் ஏதேனும் இருந்தால் உண்டுவிட்டு ஓடிவிடும்.
ஆனால், அண்மையில் ஒரு கரடி, காருக்குள் ஏதோ ஒன்றைக் கண்டு அதற்குள் சென்று வெளிவரமுடியாமல் மாட்டிக்கொண்டது.
சம்பவம் நெவாடாவில் உள்ள தாகோ ஏரிக்கு அருகில் உள்ள குடியிருப்பு வட்டாரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
கரடி சிக்கிக்கொண்டதைக் கண்ட காவல்துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு கரடியைப் பாதுகாப்பாக விடுவித்தனர். அது தொடர்பான காணொளியும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
அதிகாரிகள் ஒரு நீண்ட கயிற்றை காரின் கதவுகளில் கட்டிவிட்டு, பாதுகாப்பாக ஓர் இடத்தில் மறைந்து கொண்டு காரின் கதவைத் திறந்தனர்.
கதவு திறந்தவுடன் காரில் இருந்த கரடி துள்ளிக்குதித்து காட்டிற்குள் ஓடியது.
இருப்பினும், கரடியால் காரின் உட்பகுதி பெரும் சேதமடைந்திருந்தது.