இந்தியக் காவலர்கள்போல நடித்து மோசடி: மலேசியாவில் 22 பேர் கைது

இந்தியக் காவலர்கள்போல நடித்து மோசடி: மலேசியாவில் 22 பேர் கைது

1 mins read
1ce32276-920e-4f1a-b8c1-c7b433becf86
கோலாலம்பூரில் ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையின்போது பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் ருஷ்டி முகமது ஈசா செய்தியாளர் கூட்டத்தில் காட்சிப்படுத்தினார். - படம்: நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோலாலம்பூர்: போலி இந்தியக் காவல்துறை சீருடைகளைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வந்த ‘மக்காவ்’ மோசடிக் கும்பலை மலேசியக் காவல்துறை கைது செய்துள்ளது.

கோலாலம்பூரில் ஏப்ரல் 23ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் கைதானவர்களில் தைவான், பாகிஸ்தான், இந்தியா, மலேசியாவைச் சேர்ந்த 22 பேர் அடங்குவர்.

இக்கும்பல், மலேசியாவில் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து இந்தியாவில் உள்ளவர்களைக் காணொளி அழைப்புமூலம் ஏமாற்றி வந்துள்ளது.

அழைப்பின்போது உண்மையான இந்தியக் காவல் அதிகாரிபோலத் தோற்றமளிக்க, இந்திய காவல்துறையின் சீருடைகளை அணிந்து பேசியுள்ளனர்.

தேசத்துரோக வழக்குகளில் இருந்து தப்பிக்க பணம் செலுத்த வேண்டுமென கூறி அவர்கள் மோசடி செய்துள்ளனர். சோதனையின்போது இந்திய காவல்துறை சீருடை, 49 கைப்பேசிகள், மடிக்கணினி உள்ளிட்ட 25,000 ரிங்கிட் மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கும்பலின் தலைவனைக் கண்டறிய இந்திய அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை நடத்தப்படும் என புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் ருஷ்டி முகமது ஈசா தெரிவித்தார்.

உள்ளூர் சந்தேக நபர் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் 21 வெளிநாட்டுச் சந்தேக நபர்கள் மே 10ஆம் தேதி வரை குடிநுழைவுச் சட்ட விதிகளின்கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் திரு ருஷ்டி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்