தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடைத்தொகுதிக்குள் வாகனத்தை ஓட்டிய ஆடவரைக் காவல்துறை சுட்டுக்கொன்றது

1 mins read
b9864e91-44f1-4fd2-a56e-285a83d4faf8
சந்தேக நபர் கடைத்தொகுதிக்குள் வாகனத்தை ஓட்டிய பின் ஏற்பட்ட சேதம். - படம்: 6ஏபிசி

டெக்சஸ்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலம், கிளீனில் உள்ள கடைத்தொகுதி ஒன்றுக்குள் சனிக்கிழமை (டிசம்பர் 21) ‘பிக்அப் டிரக்’ வாகனத்தை ஓட்டிய ஆடவரைக் காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.

குடிபோதையில் வாகனம் ஓட்டிய சந்தேகத்தின் பேரில், உள்ளூர் நேரப்படி மாலை 5 மணியளவில் நெடுஞ்சாலையில் அதிகாரிகள் அந்த ஆடவரை நிறுத்த முற்பட்டதாக டெக்சஸ் பொதுப் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த சார்ஜண்ட் பிரையன் வாஷ்கோ தெரிவித்தார்.

ஆனால், வாகனத்தை நிறுத்தாமல் நெடுஞ்சாலையிலிருந்து கிளீன் கடைத்தொகுதிக்குச் சென்ற அந்த ஆடவர், அங்குள்ள ஜேசிபென்னி எனும் கடையின் கதவுகளை உடைத்துக்கொண்டு வாகனத்தைச் செலுத்தியதாக திரு வாஷ்கோ கூறினார்.

கடைத்தொகுதியில் தொடர்ந்து வாகனத்தை ஓட்டிய அந்த ஆடவர், அங்கிருந்த பலர் மீது மோதினார். அவர்களில் ஐவருக்கு லேசானது முதல் கடுமையானது வரை காயம் ஏற்பட்டதாக திரு வாஷ்கோ சொன்னார். காயமுற்றவர்கள் ஆறு வயதுக்கும் 75 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

“அந்த ஆடவர் சில நூறு மீட்டர் தூரம் சென்றார். அவர் அச்சுறுத்தலாக விளங்கியதால் அதிகாரிகள் அவரைத் துப்பாக்கியால் சுட்டனர்,” என்றார் திரு வாஷ்கோ.

குறிப்புச் சொற்கள்