ஜோகூர்பாரு: ஜோகூர்பாருவில் நெடுஞ்சாலைகளிலும் பொதுச் சாலைகளிலும் பக்கவாட்டுப் பெட்டி (Sidecar) இணைக்கப்பட்ட மோட்டார்சைக்கிளை ஓட்டிச் செல்லும் வெளிநாட்டவரைத் தேட அம்மாநிலக் காவல்துறை சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
ஒருவர் அந்த மோட்டார்சைக்கிளை ஓட்டிச் செல்லும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து தேடுதல் நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டுள்ளது. ஃபேஸ்புக்கில் வலம் வரும் அக்காணொளியை அடிப்படையாகக் கொண்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக ஜோகூர்பாரு (வடக்கு) மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் ராடின் ரம்லான் ராடின் தாஹா தெரிவித்தார்.
பொதுச் சாலைகளில் சட்டவிரோதமாக இத்தகைய வாகனங்களை இயக்கும் வெளிநாட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார். சாலை விதிகளை உறுதிப்படுத்தவும், பிற பயணிகளின் பாதுகாப்பைப் பேணவும் இந்த நடவடிக்கை அவசியமாகிறது என்றார் அவர்.
இது குறித்த தகவல் தெரிந்தவர்கள் 07-5563122 என்ற எண்ணில் காவல்துறை தலைமையகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

