பேங்காக்: பாலர் பள்ளியில் பணியாற்றிக்கொண்டிருந்த தன் மனைவியை காவல்துறை அதிகாரியான கணவன் புதன்கிழமை (செப்டம்பர் 9) சுட்டுக் கொன்றான்.
அந்த நேரத்தில் பள்ளியில் இருந்த மாணவர்கள் அனைவரும் தற்போது பாதுகாப்பாக உள்ளனர் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
அந்த மாதைக் கொலை செய்தபிறகு அக் கணவன், சோன்பூரி நகரில் உள்ள வீட்டுக்குத் திரும்பியுள்ளான். அங்கு அவனுடன் காவல்துறை அதிகாரிகள் சரண் அடைவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்திவருகின்றனர்.
நொங் பிளா லாய் பகுதியில் உள்ள பள்ளிக்கு உள்ளூர் காவல்துறை அதிகாரியான அந்த ஆடவர் சிங்கப்பூர் நேரப்படி முற்பகல் 11.30 மணியளவில் வந்து அவரது மனைவியுடன் வகுப்பறைக்கு வெளியே சிறிது நேரம் பேசியுள்ளான். அதன்பிறகு அந்த மாதை அவன் சுட்டுக்கொன்றான் என்று அப்பகுதியின் நகர மன்றத் தலைவர் சாயான் குளோமவுன் ஊடகத்திடம் தெரிவித்தார்.
பாலர்பள்ளி மாணவர்கள் எவரும் அந்தக் கொலையை நேரில் பார்க்கவில்லை. சம்பவத்துக்குப் பிறகு அனைத்து குழந்தைகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
அண்மையில் தாய்லாந்தில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிர்ச்சியூட்டும் வகையில் நிகழ்ந்துள்ளன.
இவ்வாண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி, வீட்டில் இருந்த சொந்த தாத்தா பாட்டியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றபிறகு 14 வயதுச் சிறுவன் தான் பயின்ற பள்ளிக்குச் சென்று அங்கு மேலும் எழுவரைக் கொன்றபின் தன்னையும் சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பலரது நினைவில் இன்னும் நிலைத்துள்ளது.

