நியூயார்க்: நியூயார்க்கில் ஆகஸ்ட் 22ஆம் தேதி நிகழ்ந்த பேருந்து விபத்தில் உயிரிழந்த ஐந்து பயணிகளின் பெயர்களை அம்மாநில காவல்துறை வெளியிட்டது.
நயாகரா நீர்வீழ்ச்சியிலிருந்து நியூயார்க் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது பஃப்ளோ பகுதிக்கு வெளியே நெடுஞ்சாலையிலிருந்து விலகிய பேருந்து பக்கவாட்டில் உள்ள பள்ளத்தை நோக்கிப் பாய்ந்தது.
இதில் இறந்தவர்கள் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் விபத்து நிகழ்ந்து 24 மணி நேரத்திற்குப் பிறகு அவர்களின் பெயர்களை நியூயார்க் மாநில காவல்துறை வெளியிட்டது.
இறந்தவர்களுக்கு வயது 22 முதல் 65 வரையிலாகும். ஒருவர் இந்தியாவின் மதுபனி நகரைச் சேர்ந்தவர். மூவர் நியூ ஜெர்சியைச் சேர்ந்தவர்கள். மற்றொருவர் கொலம்பிய பல்கலைக் கழகத்தில் படித்து வந்த சீனாவைச் சேர்ந்த மாணவர்.
அந்தப் பயங்கரமான விபத்தில் பல பயணிகள் இருக்கையிலிருந்து வெளியே வீசியெறியப்பட்டனர். சில பயணிகள் பேருந்துக்கு அடியில் சிக்கி நசுங்கிவிட்டதாக காவல்துறை கூறியது.
இந்தியாவின் பீகார் மாநிலம், மதுபனி நகரைச் சேர்ந்த இந்தியர் 65 வயது சங்கர் குமார் ஜா, நியூஜெர்சியைச் சேர்ந்த பிங்கி சங்கிரானி, 60, ஷாங் ஸியாவ்லான் 55, ஜியான் மிங்லி 56, பெய்ஜிங்கைச் சேர்ந்த ஸி ஹோங்ஷு 22, ஆகியோரே இறந்துபோன ஐவர்.
நியூயார்க்கின் பெம்பிரோக்கில் பிற்பகல் 12.30 மணியளவில் பேருந்து விபத்துக்குள்ளானது. அதில் 54 பயணிகள் இருந்தனர். சாலையோரமுள்ள பள்ளத்தில் பேருந்து உருண்டு ஓடியது.
தொடர்புடைய செய்திகள்
விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணை நடத்தி வருவதாக நியூயார்க் மாநிலக் காவல்துறையின் மேஜர் ஆண்ட்ரி ஜே. ரே. ஆகஸ்ட் 22 அன்று செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
குவின்ஸ் ஃபளஷிங் பகுதியின் குடியிருப்பாளர் என அடையாளம் காணப்பட்டுள்ள ஓட்டுநர் பின் ஷாவோ, 55, கவனக்குறைவால் பேருந்தின் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

