மலேசிய எல்லைகளிலுள்ள பெட்ரோல் நிலையங்களில் காவல்துறைக் கண்காணிப்பு

மலேசிய எல்லைகளிலுள்ள பெட்ரோல் நிலையங்களில் காவல்துறைக் கண்காணிப்பு

2 mins read
c05e5aad-0d92-471a-a684-15b47a9e4d8c
மலேசிய-தாய்லாந்து எல்லை நகரான பாடாங் புசாரில் கண்காணிப்புப் பணிகளை மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதின் நாசுஷன் பார்வையிட்டார். - படம்: பெர்னாமா
Google News Preferred Icon

பாடாங் புசார் (பெர்லிஸ்): எரிபொருள் கடத்தலைத் தடுக்க மலேசியாவின் எல்லையோரம் உள்ள பெட்ரோல் நிலையங்களில் காவல்துறையினர் நிறுத்தப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சர் சைஃபுதின் நாசுஷன் கூறியுள்ளார்.

தட்டுப்பாடு நிலவும் வேளையில் மில்லியன்கணக்கான லிட்டர் டீசலும் பெட்ரோலும் கடத்தப்படுவதைத் தடுக்கக் கடந்த வாரம் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு மோதல் காரணமாக எரிபொருள் விலைகள் உயர்ந்திருப்பதால் அவற்றின் கடத்தலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திரு சைஃபுதின் சொன்னார்.

மலேசியா-தாய்லாந்து எல்லைப் பகுதியில் உள்ள நிலைமையைக் கண்காணிக்கச் சனிக்கிழமை (ஏப்ரல் 11) அதிகாரத்துவ வருகை மேற்கொண்டிருந்தபோது செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அமைப்பின் (ஏகேபிஎஸ்) தலைமை இயக்குநர் முஹம்மது ஷுஹைலி முஹம்மது ஸைனும் பெர்லிஸ், கெடா மாநிலங்களின் காவல்துறைத் தலைவர்களும் அமைச்சருடன் காணப்பட்டனர்.

2025 ஜனவரி 1 முதல் இவ்வாண்டு மார்ச் வரையில் எல்லைச் சுற்றுக்காவல் படையினர் 735 எரிபொருள் கடத்தல் சம்பவங்களை முறியடித்திருப்பதாகவும் கடத்தப்படவிருந்த எரிபொருளின் மதிப்பு 2.81 பில்லியன் ரிங்கிட்  (S$903 மில்லியன்) எனவும் திரு சைஃபுதின் கூறினார்.

“எல்லை வழியாக நடைபெறும் எல்லாவிதமான கடத்தல் முயற்சிகளையும் முறியடிக்க உள்துறை அமைச்சு கடப்பாடு கொண்டுள்ளது.

“தற்போது எரிபொருள் சலுகைகளுக்கு மட்டும் அரசாங்கம் மாதந்தோறும் 6 பில்லியன் ரிங்கிட் செலவழிக்கிறது. மத்திய கிழக்கு மோதலுருக்கு முன்னர், கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் அக்டோபர் வரை அளிக்கப்பட்ட அந்தச் சலுகையின் மதிப்பு 315 மில்லியன் ரிங்கிட்டாக இருந்தது,” என்றார் அவர்.

மேலும் அவர், “குற்றக் கும்பல்களே எரிபொருள் கடத்தலில் ஈடுபடுகின்றன. மிகவும் திட்டமிட்டு, தொடர்ச்சியாகக் கடத்தலில் அவை ஈடுபடுகின்றன. எனவே, அவற்றை முறியடிக்க நாட்டின் எல்லைகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் காவல்துறையினர் நிறுத்தி வைக்கப்படுவார்கள்.

“அதனால், காவல்துறையில் ஆள்பற்றாக்குறை ஏற்படலாம். இருப்பினும், கடத்தல் முறியடிப்புப் பணிக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதற்காக, இதர பணிகள் பாதிக்கப்படும் என்று சொல்வதற்கில்லை,” என்றும் திரு சைஃபுதின் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்
எரிபொருள்மலேசியாஎல்லை