தேசிய ஒற்றுமையை அரசியல் வேறுபாடு பாதிக்கக்கூடாது: அகமது சாஹிட் ஹமிடி

தேசிய ஒற்றுமையை அரசியல் வேறுபாடு பாதிக்கக்கூடாது: அகமது சாஹிட் ஹமிடி

படம்: த ஸ்டார்

26 Sep 2026 - 5:18 pm

2 mins read

மலாக்கா: தேசிய ஒற்றுமையின் அடிப்படையாகக் கருத்து வேறுபாடுகளை முறையாக நிர்வகித்துக்கொள்ளும் அரசியல் ஞானமும் மரியாதையும் அமையவேண்டும் என்று மலேசியத் துணைப் பிரதமர் அகமது சாஹிட் ஹமிடி கேட்டுக்கொண்டுள்ளார்.

மலாக்காவின் ஆயர் கெரோவில் உள்ள அனைத்துலக வர்த்தக மைய வளாகத்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 26) நடந்த ‘மலாய் தீபகற்பத்தின் தேசிய விவாதம்’ நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தபோது அவர் இதனைக் கூறினார்.

அனைத்து அரசியல் கட்சிகளும் நாட்டின் வரலாற்றையும் அடித்தளங்களையும் நன்கு உணர்ந்துகொள்வதோடு ஒவ்வொரு குடிமகனின் உரிமைகளை மதிப்பதைப் பொறுத்தே சமூக ஒற்றுமை அமையும் எனவும் அவரது உரையில் வலியுறுத்தினார்.

மலேசிய கூட்டரசின் அரசியல் சட்டம் ஒவ்வொரு குடிமகனின் நிலைப்பாடும் உரிமைகளும் புரிந்துகொள்ளப்பட்டு, அது பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

அரசியல் உட்பட மக்களிடையே ஏற்படும் வேறுபாடுகளும் முரண்பாடான கருத்துகளும் முதிர்ச்சிபெற்ற வகையில் நாட்டின் ஒற்றுமை, நிலைப்பாடு ஆகியவற்றை முன்வைத்து நிர்வகிக்கப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

“நம்மிடையே ஏற்படக்கூடிய வேறுபாடுகள், மதம், இனம், நாடு ஆகியவை சார்ந்த விவகாரங்களில் ஒருமித்த கருத்தை அடைவதில் தடங்கலாக இருக்கக்கூடாது,” என்று அவர் குறிப்பிட்டார்.

அரசியல் சார்புடைமையைக் கடந்து மலாய் முஸ்லிம் சமூகத்தை ஒருங்கிணைக்கும் முயற்சி தொடரவேண்டும் என்று அவர் கூறினார்.

இதுகுறித்த ஒருமித்த உடன்பாடு கூட்டரசின் அரசியல் சட்டத்தில் நிலைநாட்டப்பட்டு, அனைத்து குடிமக்களின் உரிமையும் மதிக்கப்படவேண்டும் என்று அவர் வேண்டிக்கொண்டார்.

அரசியல் வேறுபாடுகள் மன்னராட்சியின் மாண்புகளைக் கலங்கப்படுத்தக்கூடாது என்பது குறித்தும் அவர் எச்சரித்தார்.

மன்னராட்சியின் நடைமுறைகளை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் அரசியல் செயல்பாடுகள் அமைதல் அவசியம் என்பதையும் அவர் விளக்கினார்.

கருத்துவேற்றுமை ஏற்படுவதற்கு முன்பாகவே ஒவ்வொரு அமைப்பின் கடமைகளும் சரிவரப் புரிந்துகொள்ளப்படவேண்டும் என்று அவர் கூறினார்.

எடுக்கப்பட்ட ஒரு முடிவினால் குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின் எதிர்பார்ப்புகள் எட்டப்படாவிடினும் அரசியல் சட்டத்தை மதிக்கும் உணர்வு முன்னிலை பெறவேண்டும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

எதிர்கால சந்ததியினருக்கு இந்த விழுமியங்களையும் கொள்கைகளையும் எடுத்துச் செல்ல வேண்டிய கடமை அரசியல் தலைவர்களுக்கு உள்ளது என்றார் துணைப் பிரதமர்.

மன்னராட்சியின் கட்டமைப்பு, கூட்டரசின் அரசியல் சட்டம் இரண்டையும் கட்டிக்காப்பதில் அம்னோ கட்சி உறுதியாக உள்ளது என்றார் அவர். அதில் மலேசிய மாமன்னர், மாநில மன்னர்கள் ஆகியோருக்கு அரசியல் சட்டப்படி கொடுக்கப்பட்டுள்ள மன்னிப்பு வழங்கும் அதிகாரமும் உள்ளடங்கும் என்று துணைப் பிரதமர் அகமது சாஹிட் ஹமிடி கூறினார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாதுணைப் பிரதமர்அரசியல்கருத்துஎதிர்க்கட்சிஒற்றுமைதேசிய முன்னணி