அரசியல் கருத்து வேறுபாடு மத்திய-மாநில ஒத்துழைப்புக்குத் தடையாக இருக்கக்கூடாது: அன்வார்

அரசியல் கருத்து வேறுபாடு மத்திய-மாநில ஒத்துழைப்புக்குத் தடையாக இருக்கக்கூடாது: அன்வார்

2 mins read
4a27c824-f4ad-4a46-8d29-9c70b66616c8
மலேசியாவில், வளர்ச்சித் திட்டங்களின் பலன்கள் சாதாரணக் குடிமக்களைச் சென்றடைவதை உறுதிசெய்ய, அரசாங்கங்களுக்கு இடையில் நெருங்கிய உறவு நிலவுவது அவசியம் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தினார். - படம்: த ஸ்டார்
Google News Preferred Icon

மலாக்கா: மத்திய-மாநில அரசாங்கங்களுக்கு இடையிலான ஒத்துழைப்புக்கு அரசியல் வேறுபாடுகள் ஒருபோதும் தடையாக இருக்கக் கூடா என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) கூறியுள்ளார்.

வளர்ச்சித் திட்டங்களின் பலன்கள் சாதாரணக் குடிமக்களைச் சென்றடைவதை உறுதிசெய்ய, அரசாங்கங்களுக்கு இடையில் நெருங்கிய உறவு நிலவுவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

மலாக்காவின் ஹாங் ஜெபாத் திடலில் நடைபெற்ற தேசிய நிலவனப்பு தினத் தொடக்க நிகழ்ச்சியில் அவர் பேசினார்.

“நமது அரசாங்கக் கட்டமைப்புக்கு மிக அணுக்கமான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது,” என்று திரு அன்வார் கூறினார்.

“நாம் வெவ்வேறு கருத்துகளைக் கொண்டிருக்கலாம், வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்; ஆனால், அது நேரடியாக மக்களுக்குப் பயனளிக்கத் துணையாக இருக்கும் நட்பு, ஒற்றுமை, ஒத்துழைப்புக்குத் தடையாக இருக்கக் கூடாது,” என்றார் அவர்.

நிலைத்தன்மை குறித்து மலேசியா வகுத்துள்ள இலக்குகள், பலன்தரக்கூடிய வகையில் விரைவில் மாற்றப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தேசியத் திட்டமிடல் முன்னுரிமைகளிலும் மாற்றம் தேவை என்று மலேசியப் பிரதமர் அழைப்பு விடுத்தார்.

உயர் வருவாய் ஈட்டும் பிரிவினருக்கு மட்டும் பலனளிக்கும் பெரிய அளவிலான திட்டங்களில் அதிக கவனம் செலுத்துவதைவிட, சாதாரண மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொது இடங்களில் அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். குறிப்பாக, சாலையோரக் கடைகள், சிறிய உணவகங்களை மேம்படுத்திப் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தைத் திரு அன்வார் சுட்டிக்காட்டினார்.

பிரம்மாண்டமான அடையாளச் சின்னங்களுக்காக மலேசியா புகழ்பெற்றிருந்தாலும் பெரும்பாலான மலேசியர்கள் ஐந்து நட்சத்திர உணவகங்களில் உணவு உட்கொள்வதில்லை என்பதை மறந்துவிடக் கூடாது என்று அவர் குறிப்பிட்டார்.

“கோலாலம்பூரில், கிட்டத்தட்ட 80 விழுக்காட்டு மக்கள் கடைகளிலும் சாலையோர உணவகங்களிலும்தான் சாப்பிடுகிறார்கள். இந்தச் சமநிலையை நாம் ஏற்படுத்தவில்லை என்றால் நமது திட்டமிடல் தோல்வியடைந்தது என்றே பொருள்,” என்றார் மலேசியப் பிரதமர்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாபிரதமர்அன்வார் இப்ராகிம்அரசாங்கம்கூட்டணிஅரசியல்