வெனிசுவேலாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் அரசியல் சிறைக்கைதிகள்

வெனிசுவேலாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் அரசியல் சிறைக்கைதிகள்

2 mins read
f2a675bd-c2ef-4990-b1ed-e301b7cda2e6
கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் பிப்ரவரி 20ஆம் தேதி இரவு தொடங்கியது. - படம்: ராய்ட்டர்ஸ்

கராகஸ்: வெனிசுவேலாவில் 200க்கும் மேற்பட்ட அரசியல் சிறைக்கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுமன்னிப்பு தொடர்பான புதிய சட்டத்தின்கீழ் தங்களை விடுவிக்கக் கோரி, சிறைக்கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திவருகின்றனர்.

முன்னாள் அதிபர் நிக்கலஸ் மதுரோ பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, அமெரிக்கா ஊக்குவித்த தொடர் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, வெனிசுவேலாவின் காங்கிரஸ் அந்தப் பொது மன்னிப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டது.

உண்ணாவிரதப் போராட்டம் பிப்ரவரி 20ஆம் தேதி இரவு கராகசின் புறநகரில் உள்ள ‘ரோடியோ ஐ’ சிறைச்சாலையில் தொடங்கியது.

அந்தச் சட்டத்திலிருந்து பயன்பெறப்போவதில்லை என்று சிறைக் கைதிகள் புகார்களை அளித்தனர்.

சிறையில் அதிகம் பதிவாகியுள்ள ராணுவம் சம்பந்தப்பட்ட வழக்குகள் அதிலிருந்து விலக்கப்பட்டிருப்பதே அதற்குக் காரணம்.

“வெனிசுவேலாவைச் சேர்ந்தவர்கள், வெளிநாட்டவர்கள் என ஏறக்குறைய 214 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்,” என்று நஹுயெல் அகஸ்டின் காலோ என்ற சிறைக் கைதியின் மாமியாரான திருவாட்டி யலிட்ஸா கார்சியா கூறினார்.

அர்ஜென்டினாவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரியான கேல் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பயங்கரவாத வழக்குகளும் அச்சட்டத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி 3ஆம் தேதி அமெரிக்கப் படைத் தளபதிகள் வெனிசுவேலாவைத் தாக்கி, மதுரோவையும் அவரது மனைவியையும் கைதுசெய்து, அவர்களை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றனர்.

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகள் அவர்கள்மீது சுமத்தப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, வாஷிங்டன் கொடுத்த நெருக்குதலுக்குப் பிறகு, வெனிசுவேலாவின் இடைக்காலத் தலைவர் டெல்சி ரோட்ரிகஸ், புதிய பொதுமன்னிப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

குறிப்புச் சொற்கள்